முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.
வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், “வழக்கின் நேரத்தை மத்திய அரசு வீணடிக்கிறது. மாநில அரசின் முடிவு அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிராக இருக்கும்போது ஆளுநர் குடியரசுத் தலைவரிடம் முறையிடலாம். ஆனால், இந்த வழக்கில் எந்த விதியின் கீழ் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார்” எனக் கேள்வியெழுப்பினர். அதற்கு, “பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, எனவே இது தொடர்பான அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பார்” என மத்திய அரசு பதிலளித்தது.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், “இந்த வழக்கில் ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்? எந்த விதியின் கீழ் மாநில அரசின் ஆளுநருக்காக மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகிறீர்கள்? ஆளுநருக்காக மாநில அரசுதான் வாதிட வேண்டும், மத்திய அரசு கிடையாது. ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும் 3 ஆண்டுகள் முடிவெடுக்காமல் இருந்தது ஏன்… இதற்கு முன்பே பேரறிவாளன் விவகாரத்தில் நீதிமன்றம் முடிவெடுக்கும் எனக் கூறியிருந்தபோது, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருப்பதாகக் கூறியிருந்தீர்கள். ஆனால், இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
மேலும், இது கிரிமினல் வழக்கு தானே, கிரிமினல் வழக்கில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா? கொலை வழக்கில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மத்திய அரசு கூறுவது போல உள்ளது” என்றனர். அதற்கு மத்திய அரசின் வழக்கறிஞர், “புலனாய்வுத் துறை மத்திய அரசின் அதிகாரத்தில் வருகிறது” என விளக்கமளித்தார். அதற்கு நீதிபதிகள், “கருணை விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தானே ஆளுநர்” எனக் கேள்வி எழுப்பினர்.
அதையடுத்து, நீதிமன்றத்தில் இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில், “அமைச்சரவை முடிவை ஏற்றுக்கொள்ளாமல் அரசியல் சாசன பிழையை ஆளுநர் செய்துவிட்டார். அமைச்சரவையின் முடிவை ஏற்காமல் கிடப்பில் போட்டுவிட்டார். ஒருவரை விடுவிக்கவோ அல்லது மறுக்கவோ ஆளுநரால் தனிப்பட்ட முடிவை எடுக்க முடியாது” என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.