சென்னை: கடலூரில் காவல்துறையினர் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது, போலீஸார் மீதே இப்படி தாக்குதல் நடந்தால் பொதுமக்களின் நிலை என்ன ஆகும்? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் காவல்துறையினர் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது முதலமைச்சர் பெருமையாக பேசி 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இதுதான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்குச் சாட்சி. காவல்துறையினர் மீதே இப்படி தாக்குதல் நடந்தால், பொதுமக்களின் நிலை என்ன ஆகும்?” என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.