மதுரை: தருமை ஆதினம் பட்டினப் பிரவேசத்துக்கான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை ஆதினத்தை திடீரென நேரில் சந்தித்து 20 நிமிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மயிலாடுதுறையில் அமைந்துள்ளது தருமபுரம் ஆதினம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பட்டினப்பிரவேசம் நடைபெறும். பட்டினப் பிரவேசத்தில் சன்னிதானத்தை பல்லக்கில் பக்தர்கள் சுமந்து செல்வர். இந்த வழக்கம் 500 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தாண்டு பட்டினப்பிரவேசம் மே 22ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததால் பட்டினப்பிரவேசத்துக்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த தடைக்கு அதிமுக, பாஜக, மதுரை ஆதீனம் மற்றும் மத குருமார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தடையை விலக்கக்கோரி சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
“எப்படியாவது பட்டினப்பிரவேசத்தை நடத்துவோம், தருமை ஆதீனத்தை நானே தோளில் சுமப்பேன்” என்று கூறி அரசுக்கு எதிராக கடுமையாக பேசினார் மதுரை ஆதீனம். “ஆதீன பல்லக்கை நானும் சுமப்பேன்” என பாஜக தலைவர் அண்ணாமலையும் அறிவித்தார்.
இந்த நிலையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் பல்வேறு ஆதினகர்த்தர்கள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பட்டினப் பிரவேசம் நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பட்டினப்பிரவேசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
பட்டினப் பிரவேசத்துக்கான தடை நீக்கப்பட்டதை மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் பெரியளவில் கொண்டாடினர். அரசின் உத்தரவை எதிர்த்து வெற்றிப் பெற்றதற்காக ஆதீனகர்த்தர் ஒருவர் மடத்தை விட்டு வெளியில் வந்து மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியது இதுவே முதல் முறையாகும். இந்த கொண்டாட்டத்தின் போது பட்டினப்பிரவேசத்துக்காக குரல் கொடுத்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மதுரை ஆதீனம் நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென மதுரை ஆதினத்தை நேரில் சந்தித்து பேசினார். மதுரையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அண்ணாமலை இரவில் திடீரென மதுரை ஆதின மடத்துக்கு சென்றார். அவரை இந்து அமைப்பைச் சேர்ந்த ஆதிசேஷன் மடத்துக்குள் அழைத்துச் சென்றார். பின்னர் மதுரை ஆதீனத்திடம் அண்ணாமலை ஆசி பெற்றார்.
ஆதினமும் அண்ணாமலையும் சுமார் 20 நிமிடம் தனியே ஆலோசனை நடத்தினர். பின்னர் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். பட்டினப் பிரவேசத்துக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்த மதுரை ஆதீனத்தை, தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.