மதுரை: விவாதமே இல்லாமல் முடிந்த மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் ‘இருக்கை’களுக்காக திமுக-அதிமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் வெடித்தது, இதைத் தொடர்ந்து மேயர் கணவரின் ஆதரவாளர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மாநகராட்சி கூட்டத்திலேயே அதிமுக கவுன்சிலர்களுக்கு ஒரே பகுதியில் வரிகையாக இருக்கைகள் ஒதுக்காமல் ஆங்காங்கே ஒதுக்கப்பட்டிருந்தது. அதிருப்தியடைந்த அதிமுக கவுன்சிலர்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அடுத்தக்கூட்டத்தில் இருக்கைகளை சரியாக ஒதுக்குவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், இந்தக் கூட்டத்திலும் அதிமுக கவுன்சிலர்களுக்கு முதல் கூட்டத்தை போலவே ஒரே இடத்தில் ஒதுக்காமல் ஆங்காங்கே இருக்கைகள் ஒதுக்கியிருந்தனர். அதேநேரத்தில் காங்கிரஸ்-சிபிஎம் கவுன்சிலர்களுக்கு ஒரே பகுதியில் இருக்கைகள் வரிசையாக ஒதுக்கப்பட்டிருந்தன. அதிருப்தியடைந்த அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, எதிர்கட்சி துணைத் தலைவர் சண்முகவள்ளி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், திமுக கவுன்சிலர்களுக்கு ஒதுக்கிய குறிப்பிட்ட பகுதியை பிடித்து வரிசையாக அமர்ந்து கொண்டனர்.
அதற்கு பிறகு வந்த திமுக கவுன்சிலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அதிமுக கவுன்சிலர்கள் அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவர்களிடம் இருக்கையை விட்டு எழுந்திருக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏற்ககெனவே திமுக கவுன்சிலர்களுக்கும், மேயருக்கும் மோதல் போக்கு இருந்து வரும்நிலையில் இருக்கை விவகாரத்தில் அதிருப்தியடைந்த திமுக கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்களிடம் ”மேயர் இருக்கை சும்மாதானே இருக்கிறது, அங்கே போய் அமருங்கள், நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம்,” என்றனர். ஆனாலும், அதிமுக கவுன்சிலர்கள் இருகைகளை விட்டு எழுந்திருக்காமல் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் மூத்த கவுன்சிலர்கள் சிலர், அதிமுக கவுன்சிலர்களிடம் ”உங்களுக்கு இருக்கை சரியாக ஒதுக்கவில்லையென்றால் மேயரிடம் சென்று முறையிடுங்கள், அதைவிட்டு மற்றவர்களுக்கு ஒதுக்கிய இருக்கையில் அமருவது சரியானது அல்ல,” என்றனர். ‘இருக்கை’களுக்காக திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை அறிந்த மேயர், மாநகராட்சி ஆணையாளர், துணை மேயர் மாமன்ற கூட்டரங்கிற்கு வராமல் தங்கள் அறைகளிலே இருந்தனர்.
ஒரு கட்டத்தில் நீண்ட நேரம் திமுக கவுன்சிலர்களிடம் போராட முடியாமல் அதிமுக கவுன்சிலர்கள் எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் மேயரை பார்த்து முறையிட அவரது அறைக்குச் சென்றனர். அப்போது அவர்களுடன் டிவி கேமிரா மேன்கள், செய்தியாளர்கள் சென்றனர். அப்போது மேயர் அறை அருகே மற்றொரு அறையில் மேயர் கணவர் பொன்வசந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமர்ந்திருந்தனர். பொன்வசந்திடம் அதிமுக கவுன்சிலர்கள் முறையிட அந்த அறைக்குள் செல்ல முயன்றனர். அப்போது செய்தியாளர்கள் வீடியோ எடுத்தனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பொறுப்பில் இருக்கும் பெண்களின் கணவர்கள் எக்காரணம் கொண்டும் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிப்புடன் கூறியுள்ளார். அதனால், பொன்வசந்த் ஆதரவாளர்கள், அவருடன் அதிமுக கவுன்சிலர்கள் பேசுவதை வீடியோ எடுக்கக்கூடாது என்று செய்தியாளர்களை அந்த அறையை விட்டு தள்ளிவிட்டனர். அதில் இருவர் காமிராவுடன் கீழே விழுந்தனர். இதில், மேயர் கணவர் ஆதரவாளர்கள், செய்தியாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், இரு டிவி கேமிரா மேன்களுக்கு தலை மற்றும் உடல் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. அதிருப்தியடைந்த செய்தியாளர்கள், மேயர் கணவர் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மேயர் அறை முன் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், கூட்டம் தொடங்குவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது. மேயர் கணவர் பொன்வசந்த் செய்தியாளர்களை சமாதானம் செய்தார்.
அதற்கு செய்தியாளர்கள், ”மேயர் அறைக்குள் செல்வதை தடுக்க அவர்கள் யார், அவர்களுக்கு மேயர் அறையில் என்ன வேலை,” என்றனர். உடனே பொன்வசந்த், செய்தியாளர்களை தாக்கியவர்களை வரவழைத்து வருத்தம் தெரிவிக்க செய்தார். மேயர் வராமல் கூட்டம் தாமதம் ஆகி கொண்டே சென்றதால் மாமன்றத்தில் அமர்ந்திருந்த திமுக கவுன்சிலர்களே ஒரு கட்டத்தில் வெறுப்படைந்து, ”பேசாம நாமும் வெளிநடப்பு செய்துவிடலாம்,” என்று கிண்டலாக பேசிக் கொண்டனர்.
ஒரு வழியாக செய்தியாளர்கள், மேயர் கணவர் ஆதரவாளர்கள் மோதல் முடிவுக்கு வந்ததால் 1 1/4 மணி நேரம் தாமதமாக மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. அதில் மேயர் இந்திராணி பேசுகையில், ”செய்தியாளர்கள் தொடர்பாக சில எதிர்பாராத நிகழ்வு நடந்துவிட்டது. அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அந்த சம்பவத்தில் தொடர்பு உடையது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”அதிமுக கவுன்சிலர்களுக்கு அடுத்த கூட்டத்தில் குறிபிட்ட இடம் ஒதுக்கி ஒரே பகுதியில் இருக்கைகள் ஒதுக்கப்படும்,” என்றார்.
நிர்வாகத்தில் மேயர் கணவர் தலையீடு: அதிமுக கவுன்சிலர்கள் கூறுகையில், ”மாநகராட்சி நிர்வாகத்தில் மேயர் சுதந்திரமாக செயல்படவில்லை. அவரது கணவர் தலையீடு அதிகமாக இருக்கிறது. எங்களுக்கு மட்டுமில்லை, திமுக கவுன்சிலர்களுக்குமே மேயர் கணவர் நிர்வாகத்தில் தலையீடுவது பிடிக்கவில்லை. மேயர் அறையில் அவரது கணவருக்கு என்ன வேலை. ஆனால், மேயர் கணவர் அவரது ஆதரவாளர்களுடன் மேயர் அறைக்கு வந்து செல்கிறார். அவரது ஆலோசனை பேரிலே மேயர் செயல்படுகிறார். இந்த இருக்கை விவகாரத்தையும் மேயர் நினைத்திருந்தால் எளிதாக தீர்வு கண்டறிருக்கலாம். ஆனால், அவர் மற்றவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாலே எங்களுக்கு ஒரே பகுதியில் இருக்கை ஒதுக்கவில்லை,” என்றனர்.