உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வாதத்தில் அமைச்சரவை முடிவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்பது பெரும் விவாதத்துக்கு உட்பட்டது. மேலும், இவ்விஷயத்தில் முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பதும் கேள்விக்குட்படுத்தப்பட்டது. இந்த விவாதம் தொடர்பாக, நளினிக்காக வாதிடும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார்.
தொடர்புடைய செய்தி: விடுதலை ஆகின்றாரா பேரறிவாளன்? உச்சநீதிமன்றத்தில் மத்திய மாநில அரசுகள் கடும் வாதம்!
அவர் பேசுகையில், “மாநில அமைச்சரவை முடிவெடுத்துவிட்டால், அந்த முடிவு ஆளுநரை கட்டுப்படுத்தும் என்பது உச்சநீதிமன்றமே முந்தைய வழக்குகளில் வழங்கிய தீர்வுதான். அந்தவகையில் பேரறிவாளன் வழக்கில், மாநில அமைச்சரவை 2018-லேயே முடிவெடுத்து விட்டார்கள். ஆளுநர்தான் இப்போதுவரை முடிவெடுக்கவில்லை. ஆகவே குறிப்பிட்ட காலத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்றால், அதற்கு என்ன அர்த்தம் என்றே இப்போது உச்சநீதிமன்றம் பார்க்க வேண்டும். ஆளுநரின் இந்த செயல், நீதிமன்றத்தை முழுக்க முழுக்க அவமதிக்கும் செயல் என்றே பொருள்படுகிறது.
இவ்வழக்கை பொறுத்தவரை, இதில் குற்றம் சாட்டப்பட்ட எழுவருக்கு பல தண்டனைகள் விதிக்கப்பட்டன. அவர்கள் அவற்றில் இரண்டை தவிர, அனைத்தையும் முடித்துவிட்டனர். அந்த 2 தண்டனைகளை (பிரிவு 120 பி ஐபிசி , 302 ஐபிசி ஆயுள் தண்டனை) மட்டுமே அனுபவித்து வருகின்றனர். இந்த தண்டனைகளை முழுமையாக ரத்து செய்ய, மாநில அரசுக்கு உரிமை உள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பின் கீழ் வருவதாலெல்லாம், இதில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று இல்லை. ஆகவே இதுதொடர்பாக மத்திய அரசு முன்வைத்த வாதம் அனைத்தும், முழுக்க முழுக்க தவறானவை, சட்டத்துக்கு புறம்பானவைதான்’ என்றார்.
இவரது பேட்டியை வீடியோ வடிவில் இங்கு காண்க:
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM