வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ‘டுவிட்டர்’ மற்றும் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் விதிமுறைகளை மீறும் கணக்குகள் இடைநீக்கம் செய்யப்படும் விவகாரத்தில், மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
டில்லியை சேர்ந்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே என்பவரின், டுவிட்டர் கணக்கை, 2019ல் அந்நிறுவனம் முடக்கியது. பதிவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை அவர் மீறியதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பின் விளக்கம் கேட்கப்பட்டது.
இதற்கு, மத்திய அரசு பதில் அளிக்கையில், ‘இந்த விவகாரத்தை, டுவிட்டர் நிறுவனமும், வழக்கறிஞர் ஹெக்டேவும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்’ என்றது. இந்நிலையில், இதே போன்ற ஒரு வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. அப்போது, ‘பயனாளர்களின் பதிவுகளை நீக்கும் போதும், கணக்குகளை முடக்கும் போதும், தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.
டுவிட்டர், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இந்திய சட்ட திட்டங்களை மதித்து செயல்பட வேண்டும்’ என, மத்திய அரசு தெரிவித்தது. மேலும் கடந்த வாரம் நடந்த மற்றொரு வழக்கு விசாரணையின்போது, ‘மூன்றாண்டுகளுக்கு முன் வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், கருத்து சுதந்திரத்தையும் மீறும் செயல்’ என, மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
Advertisement