மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காக சிறப்பு விருது வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வங்காள எழுத்தாளர் ஒருவர் பச்சிம்பங்கா பங்களா அகாடமியால் வழங்கப்பட்ட விருதை திருப்பி அளித்தார்.
வங்க மொழி எழுத்தாளர் ரத்னா ரஷீத் பானர்ஜி 2019 இல் பச்சிம்பங்கா பங்களா அகாடமியால் கௌரவித்து அளிக்கப்பட்ட ‘அன்னத சங்கர் ஸ்மரக் சம்மான்’ விருதை செவ்வாய்கிழமை திருப்பி அளித்தார்.
விருதை திருப்பி அளித்தது குறித்து எழுத்தாளர் ரத்னா ரஷீத் பானர்ஜி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தொலைபேசியில் கூறுகையில், “அவர்களின் முடிவு எனக்குப் பிடிக்கவில்லை, அதனால்தான் எனது விருதைத் திருப்பித் தர முடிவு செய்தேன். எனது நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் இல்லை. இதைப் பற்றி நான் எழுத வேண்டிய அனைத்தையும் நான் எழுத்துப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளேன்” என்று கூறினார்.
30 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ள ரத்னா ரஷீத் பானர்ஜி சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவுகள் உட்பட நாட்டுப்புற கலாச்சாரம் குறித்த ஆராய்ச்சிப் பணிகளையும் செய்துள்ளார்.
அகாடமியின் தலைவரும், மாநிலக் கல்வி அமைச்சருமான பிரத்யா பாசுவுக்கு எழுதிய கடிதத்தில், ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு புதிய இலக்கிய விருதை வழங்க முடிவு செய்ததை அடுத்து, இந்த விருது தனக்கு முள் கிரீடமாக மாறியுள்ளதாக எழுத்தாளர் ரத்னா ரஷீத் பானர்ஜி கூறியுள்ளார்.
“ஒரு எழுத்தாளராக, முதலமைச்சருக்கு இலக்கிய விருது வழங்குவதற்கான நடவடிக்கையால் நான் அவமதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமையும். மாண்புமிகு முதலமைச்சரின் இடைவிடாத இலக்கியத் தேடலைப் பாராட்டி விருது அளிப்பதாக அகாடமி கூறியிருப்பது உண்மையைக் கேலிக்கூத்தாக்குவதாக உள்ளது” என்று எழுத்தாளர் ரத்னா ரஷீத் பானர்ஜி கூறினார்.
மேலும், வங்காள எழுத்தாளர் ரத்னா ரஷீத் பானர்ஜி, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு விருது அறிவிக்கப்பட்ட பிறகு அதை ஏற்காமல் முதல்வர் அதற்கு மறுப்பு தெரிவித்து மனமுதிர்ச்சியைக் காட்டியிருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜியின்‘கவிதை பித்தன்’ என்ற நூல் 2020 இல் சர்வதேச கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“