புதுடெல்லி: மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் பண்டிட் சுக்ராம் மரணம் அடைந்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பண்டிட் சுக்ராம் (95), கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பண்டிட் சுக்ராம் இறந்ததாக செய்தி பரவியது. ஆனால் அந்த தகவலை அவரது பேரன் ஆயுஷ் சர்மா மறுத்துவந்தார். மேலும், தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பண்டிட் சுக்ராம் மகன் அனில் சர்மா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் பிவி நரசிம்மராவ் தலைமையிலான ஒன்றிய அரசில், தகவல் தொடர்புத் துறை அமைச்சராக பண்டிட் சுக்ராம் இருந்தார். தொடர்ந்து 1996ம் ஆண்டில் தகவல் தொடர்பு துறையில் நடந்த மோசடியில் பண்டிட் சுக்ராமின் பெயர் அடிபட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. கடந்த 1985 முதல் 1989ம் ஆண்டு வரை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தார். அதன்பின் கடந்த 1998ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி இமாச்சல் விகாஸ் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் பண்டிட் சுக்ராம் கட்சி நான்கு இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.