புதுடெல்லி: ரயில்களில் தாயுடன் குழந்தைகள் படுத்து தூங்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தனியாக பெர்த் வசதி நடைமுறை சாத்தியமில்லாதது, பாதுகாப்பற்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அன்னையர் தினத்தை ஒட்டி ரயில்களில் தாயுடன் குழந்தைகள் படுத்து உறங்கும் வகையில் புதிய பெர்த் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய வசதி வடக்கு ரயில்வேயில் லக்னோ மெயில் ரயிலில் சோதனை அடிப்படையில் குழந்தைகளுக்கான பெர்த் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான, படுக்கை வசதிக்கு பக்கத்திலேயே குழந்தைகென்று பிரத்யேகமாக சிறிய அளவிலான பெர்த் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தை உருண்டு கீழே விழாமல் இருக்க சீட்டில் ஒரு இரும்பு கம்பியும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி குறித்து ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதற்கு பொது மக்களில் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
புதிய வசதி குறித்து பத்திரிகையாளர் ஃபே டிசோசா கூறும் போது, “இந்த புதிய வசதியை வடிவமைக்கும் போது எந்த தாய்மார்களிடமும் கருத்துக் கேட்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஆதித்ய ராஜ் கவுல் கூறும் போது, “நல்ல திட்டம், ஆனால் வடிவத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். குறிப்பாக பாதுகாப்பு வசதி குறித்து நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கிஞ்சல் பட்டேல் என்பவர்,” நல்ல முயற்சி, ஆனால் குழந்தை பெர்தின் உள்பக்கத்தில் தான் தூங்கும். அதனால் அடுத்த முறை புதிய பகுதியை நீளமாக வைத்தால், தாய்மார்கள் தூங்க அதிக இடம் கிடைக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நபர் , “நல்ல எண்ணம். ஒருவேளை மேல் பெர்த்தில் உள்ளவர் கைதவறி பாட்டிலையோ, டீயையோ கொட்டினால் என்னவாகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ப்ரீதி என்பவர், ” இந்த வடிவத்தில் குறைகள் இருந்தாலும், அதிக இடம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர். அமைச்சகத்தில் யாரோ ஒருவர் இதுகுறித்து யோசித்திருக்கின்றார்” என்று பதிவிட்டுள்ளார்.
பரூக் என்பவர், ” என்ன ஒரு அருமையான திட்டம். ஒருவேளை இரவில் மேல் பெர்த்தில் தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவர் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கும் போது கீழே இறங்கினால் என்னவாகும். யார் இதை வடிவமைத்தது, அனுமதி அளித்தது. இது வசதி இல்லை. இது குழந்தைகளுக்கான அபாயம்” என்று தெரிவித்துள்ளார்.
கவிதா நாயர் என்பவர், ” இதுகுறித்து தாய்மார்களிடம் கருத்துக்கேட்டால் நன்றாக இருக்கும். இது ஒரு நல்ல தொடக்கம் என்றாலும் புதிய பெர்த்தின் வடிவம் பாதுகாப்பானதாக தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.