கீவ்:
ரஷியாவின் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள நோவோப்ஸ்கோவ் மையம் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனம், தனது சப்ளையை நிறுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய பின்னர் இயற்கை எரிவாயு விநியோகம் முதன்முறையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ரஷியா தனது இயற்கை எரிவாயுவை ஐரோப்பாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவற்கு, உக்ரைனில் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம்.
இதுபற்றி எரிவாயு சப்ளை செய்யும் நிறுவனம் கூறுகையில், ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், ரஷிய ஆக்கிரமிப்புப் படைகளின் குறுக்கீடு காரணமாக எரிவாயு சப்ளையை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் வழியாக மேற்கு ஐரோப்பாவிற்கு செல்லும் ரஷிய எரிவாயுவில் மூன்றில் ஒரு பங்கை இந்த நோவோப்ஸ்கோவ் மையம் கையாளுகிறது. ரஷிய அரசுக்கு சொந்தமான காஸ்பிராம் நிறுவனம் நான்கில் ஒரு பங்கை கையாள்கிறது.