இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக , அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொழும்பில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தில் ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதால், பல இடங்களில் கலவரம் பெரிய அளவில் உருவானது. இதையடுத்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது.
அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சவும், அவரின் குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் திரிகோணமலை கடற்படை தளத்துக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராஜபக்சே குடும்ப உறுப்பினரான நமல் ராஜபக்சேவின் மனைவி லிமினி, அவரின் மகன் கேசரா ஆகியோர் நேற்று காலை கொழும்பில் இருந்து திருகோண கடற்படை தளத்திற்கு தப்பிச் சென்றனர் என ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது.
இதையடுத்து, இலங்கையை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்கள் என்று இலங்கை சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இதையடுத்து இது ஒரு வதந்தி .இதை யாரும் நம்ப வேண்டாம் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதரகம், தனது ட்விட்டர் பதிவில், “குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதனை உயர் ஸ்தானிகராலயம் அவதானித்துள்ளது
இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான அறிக்கைகளாக உள்ளதுடன் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை. இவ்வாறான செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கின்றது.” என கூறியுள்ளது.