புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் முறையற்ற வகையிலான அழுத்தம் காரணமாக யுபிஐ பேமெண்ட் முறையை தங்கள் தளத்தில் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் காயின்பேஸ் தலைமை செயல் அதிகாரி பிரையன் ஆர்ம்ஸ்ட்ராங்.
கிரிப்டோ கரன்சிகளை எக்ஸ்சேஞ்ச் செய்யும் தளமாக உள்ளது காயின்பேஸ். அமெரிக்காவில் கடந்த 2012-இல் தொடங்கப்பட்டது. இப்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனம் தனது சேவையை வழங்கி வருகிறது. கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பெங்களுருவில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் மூலம் இந்தியாவிலும் தனது இயக்கத்தை தொடங்கியது காயின்பேஸ். அடுத்த சில நாட்களில் யுபிஐ சார்ந்த சேவைகள் இந்த தளத்தில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் பிரையன் ஆர்ம்ஸ்ட்ராங்.
“நாங்கள் எங்கள் சேவையை இந்தியாவில் தொடங்கிய சில நாட்களில் இந்திய ரிசர்வ் வங்கி, முறையற்ற வகையில் அழுத்தம் கொடுத்த காரணத்தால் யுபிஐ பேமெண்ட் சேவைகளை நிறுத்தினோம். முன்னதாக, இந்தியாவில் யுபிஐ பேமெண்ட் மூலம் கிரிப்டோ வாங்கலாம் என தெரிவித்திருந்தோம்.
இந்தியா ஒரு முக்கியமானதாக சந்தையாகும். கிரிப்டோகரன்சியை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருந்தாலும் ரிசர்வ் வங்கியின் இந்த நகர்வு நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும். ஆனால் அவர்களுடன் நாங்கள் இணக்கமாக சென்று, மீண்டும் எங்கள் சேவையை தொடங்க முடிவு செய்துள்ளோம்.
யுபிஐ மட்டுமல்லாது பரிவர்த்தனைகள் மேற்கொள்ள பல வழிகள் உள்ளன. அந்த வழியை கண்டறிந்து மீண்டும் எங்கள் செயல்பாட்டை இந்தியாவில் தொடங்குவோம்” என தெரிவித்துள்ளார் பிரையன்.