உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மே 4ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது, நன்னடத்தையுள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றமே முடிவெடுக்கும் என தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நட்ராஜ், விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பது தொடர்பாக குடியரசுத்தலைவர் முடிவெடுக்கவுள்ளார் என்றார். இது அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர். அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
இன்று நீதிமன்றம் முக்கிய முடிவு எடுக்கலாம் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணையின்போது அரசமைப்பின்படி மத்திய அரசுக்கு உள்ள அதிகாரம், உச்சநீதிமன்றத்தில் முந்தைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம் செய்தது. மத்திய அரசு தரப்பில், `மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வரும் விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் மட்டும் மாநில அரசு முடிவெடுக்கலாம். பேரறிவாளன் வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பின் கீழ் வருவதால் மாநில அரசு முடிவெடுக்க முடியாது. பொதுவான சட்டப்பிரிவாக இருந்தாலும் எந்த விசாரணை அமைப்பு பொறுத்தே அதிகாரம் அமையும்’ என்று வாதிக்கப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், `இந்திய குற்றவியல் சட்டத்தின் 432, மற்றும் 161 ஆகிய பிரிவுகளுக்கிடையே என்ன வேறுபாடுகள் உள்ளன? பேரறிவாளன் வழக்கில், 3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்கவில்லை. கடந்தமுறை வழங்கப்பட்ட இரண்டு வாய்ப்புகள் தொடர்பாக மத்திய அரசின் முடிவு என்ன? இந்திய குற்றவியல் வழக்குகளில் முடிவெடுக்க, குடியரசு தலைவருக்கு தனி அதிகாரம் உள்ளதா? கிரிமினல் வழக்குகளில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மத்திய அரசு கூறுவதுபோல் இருக்கிறது. அமைச்சரவை முடிவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்பதை தெளிவுபடுத்துங்கள். பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் நேரத்தை வீணடிக்கப்படுகிறது. 75 ஆண்டுகளாக இந்திய குற்றவியல் சட்ட வழக்குகளில் ஆளுநர்களின் மன்னிப்புகள் அனைத்தும் அரசமைப்புக்கு முரணானதா? ஆளுநருக்காக மாநில அரசுதான் வாதிடவேண்டும், மத்திய அரசு வாதிடுவது ஏன்?” என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி, கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க… பேரறிவாளன் விவகாரம்: ஆளுநர் தனிப்பட்ட முடிவு எடுக்க அதிகாரமில்லை- உச்சநீதிமன்றம்
இதற்கு, பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மேலும் சில வாதங்களை முன்வைக்க விரும்புவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறி `தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட அதிகாரம் இருக்கிறதா என்பதே பிரதான கேள்வியாக இருக்கிறது’ என வாதிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில், `பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் வாதிட, எங்களுக்கு உரிமை உள்ளது. மத்திய அரசு இதில் தலையிட்ட பின்னர்தான் குழப்பமே தொடங்கியது’ என்று கூறப்பட்டது.
தொடர்ந்து வழக்கின் விசாரணை நடந்து வருகின்றது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM