DMK leader RS Bharathi said we thrown out Vaiko: தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா மகன் பாஜக இணைய உள்ளது குறித்த கேள்விக்கு, யார் வந்தாலும், யார் போனாலும் கவலை இல்லை, வைகோ-வையே தூக்கி எறிந்தோம் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
திமுக மாநிலங்களவை எம்.பி.யான திருச்சி சிவாவின் மகன் சூர்யா அண்மையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.,வில் இணைந்தார். அப்போது, தி.மு.க குடும்ப பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பா.ஜ.கவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விருப்பம் உள்ளதாக சூர்யா தெரிவித்தார். தி.மு.க.வின் எம்.பி மகன் பா.ஜ.க.வில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்தநிலையில், யார் வந்தாலும், யார் போனாலும் கவலை இல்லை, வைகோ-வையே தூக்கி எறிந்தோம் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
எழும்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.பரந்தாமன் அவர்களின் தந்தை 16ம் நாள் திருவுருவ படம் திறப்பு நிகழ்வு திருநின்றவூரில் நடைபெற்றது. இதில், கலந்துக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தருமபுரம் ஆதீனம் பல்லக்கு நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது குறித்த கேள்விக்கு எது நியாயமோ, எது நாட்டுக்கு ஏற்றதோ, எதை சமுதாயம் ஏற்குமோ அதை தான் முதல்வர் செய்துள்ளார் என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: காலியிடங்களால் தவித்து வரும் வனத்துறை; 3 மாதங்களில் நிரப்பப்படும் என தகவல்
பின்னர், தி.மு.க எம்.பி திருச்சி சிவா மகன் பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு போனபோதே கவலை படவில்லை, வைகோ-வையே தூக்கி எறிந்தோம், திமுக தேம்ஸ் நதி மாதிரி யார் வந்தாலும், யார் போனாலும் அது பற்றி கவலை இல்லை, தேம்ஸ் நதி போன்று 70 வருடம் திமுக போய் கொண்டிருக்கிறது. இன்னும் 100 ஆண்டுகள் போகும் என்று கூறினார்.