தென்காசியில் கடந்த 4-ஆம் தேதி முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்த மகளையும் கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.
தென்காசி அருகே உள்ள இலஞ்சி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோட்டை மாடன் என்ற 82 வயது முதியவர் அவரது மாந்தோப்பில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மோப்பநாயை கொண்டு போலீசார் சம்பவ இடத்தில் துப்பு துலக்கியபோது, அது கோட்டை மாடனின் மூத்த மகளின் கணவர் பரமசிவனின் மோட்டார் சைக்கிளை சுற்றி வந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 3 மகள்களை பெற்ற கோட்டை மாடன், தனது ஒன்றரை ஏக்கர் மாந்தோப்பை மரணத்துக்கு பிறகு தனது 2-வது மகளின் மகனுக்கு எழுதி வைக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதில் உடன்பாடு இல்லாத அவரது 3-வது மகள் ஸ்ரீதேவி மற்றும் மூத்த மகளின் கணவர் பரமசிவம் ஆகியோர் கோட்டை மாடனுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், அவரை தீர்த்துக்கிட்டிவிட்டு சொத்தை அபரிக்க நினைத்த அவர்கள், சேகர் என்ற இடைத்தரகர் மூலம் கூலிப்படையை ஏவி கோட்டை மாடனை அவரது தோப்பில் வைத்து கொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து மகள், மருமகன் உட்பட 4 பேரை கைது செய்ததுடன், தப்பியோடிய சேகரை போலீசார் தேடி வருகின்றனர்.