புதுடெல்லி: தமிழகத்தில் கடந்த 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அதிகளவு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நாட்டிலேயே 2வது இடத்தை பெற்றுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேச துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பு வாதாடி வந்தது. ஆனால், இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்பட்டது. அதனால், தற்போது நிலுவையில் இருக்கும் தேசதுரோக வழக்குகளையும், இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விபரங்கள் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசதுரோக வழக்கின்படி, எந்தவொரு நபரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதினாலோ அல்லது பேசினாலோ அல்லது அத்தகைய உள்ளடக்கத்தை ஆதரித்தாலோ அல்லது தேசிய சின்னங்கள் மூலம் அரசியலமைப்பை இழிவுபடுத்த முயன்றால், அவர் மீது ஐபிசி-யின் பிரிவு 124ஏ-ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படலாம். மேலும், தேச விரோத அமைப்போடு தொடர்புடையவராகவோ அல்லது அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டால் அவருக்கு எதிராகவும் தேசத்துரோக வழக்கு பதிய முடியும். இந்நிலையில், தேசத் துரோகச் சட்டம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்த மாநிலமாக பீகார் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, பீகாரில் மட்டும் 168 தேசதுரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து தமிழ்நாட்டில் – 139, உத்தரப் பிரதேசத்தில் – 115, ஜார்கண்ட்டில் -62, கர்நாடகாவில் – 50, ஒடிசாவில் – 30, அரியானாவில் – 29, ஜம்மு காஷ்மீரில் – 26, மேற்குவங்கத்தில் – 22, பஞ்சாப்பில் – 21, குஜராத்தில் – 17, இமாச்சல் பிரதேசத்தில் – 15, டெல்லியில் – 14, லட்சத்தீவில் – 14, கேரளாவில் – 14 என்ற வரிசையில் வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலும், கடந்த 2016 மற்றும் 2019 ஆண்டுக்கு இடையில், தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை 160 சதவீதம் (93 வழக்குகள்) அதிகரித்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டில் தண்டனை விகிதம் என்று பார்த்தால் 3.3 சதவீதமாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 93 பேரில் இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொருத்தமட்டில் 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த காலக் கட்டத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.