சென்னை: அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வழங்கப்படும் திட்டம் வரும் 2022-2023 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு குறித்து, வரும் 17ந்தேதி கல்வியாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும், நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் பொறியியல் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும் என்றும், தொலைந்து போன சான்றிதழ் பெற பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் இதுவரை ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
12ஆம் வகுப்பினை முடித்தப் பின்னர் உயர்கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் இந்த திட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ், ஆறு முதல் 12ம்வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டமான ரூ.1000 வழங்கும் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.