டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. சீசனை இன்னும் சுவாரஸ்யப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தியாகம் செய்ய தயாராக இருக்கும் ராஜஸ்தான் அணி, டெல்லி அணிக்கு இரண்டு புள்ளிகளை பரிசாக அளித்திருக்கிறது. ராஜஸ்தானின் பரந்துபட்ட மனப்பான்மையால் டெல்லி 8 விக்கெட் வித்தியாசத்தில் ரொம்பவே சௌகரியமாக வென்று நிற்கிறது.
ராஜஸ்தான் ஆடும் போட்டிகளில் இனி டாஸே போட வேண்டாம் என ஐ.பி.எல் இன் நிர்வாகக்குழு கூடி ஒரு முடிவை எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில், சாம்சன் அத்தனை போட்டிகளிலும் டாஸில் தோற்றுதான் போகிறார். இந்த சீசனில் ஒரே ஒரு முறை மட்டும்தான் டாஸை வென்றிருக்கிறார். இந்தப் போட்டியில் வழக்கம்போல எதிரணியின் கேப்டனான ரிஷப் பண்ட்தான் டாஸை வென்றார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார்.
ராஜஸ்தான் அணி பேட்டிங்கைத் தொடங்கியது. அந்த அணிக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அணியின் முதுகெலும்பான பட்லரே 7 ரன்களில் சீக்கிரமே அவுட்டாகி வெளியேறினார். சர்க்காரியா தொடர்ந்து 4 பந்துகளை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிவிட்டு ஒரு பந்தைக் கொஞ்சம் டைட்டாக வீச இறங்கி வந்து மிட் ஆனில் கேட்ச் ஆகி வெளியேறினார். நம்பர் 3-ல் அஷ்வினையே மீண்டும் இறக்கிவிட்டனர்.
அஷ்வின் ஜெய்ஸ்வால் இருவரும் பவர்ப்ளேயின் எஞ்சிய ஓவர்களில் நன்றாகவே ஆடியிருந்தனர். குறிப்பாக, அஷ்வின் 3 பவுண்டரிகளையும் 1 சிக்ஸரையும் அடித்து பவர்ப்ளேயை அதிரடியாக முடித்திருந்தார். பவர்ப்ளேயின் முடிவில் அஷ்வின் 13 பந்துகளில் 21 ரன்களை எடுத்திருந்தார். ஆனால், பவர்ப்ளே முடிந்த பிறகு அஷ்வினின் அதிரடி தொடரவில்லை. வித்தியாசமாக தரையோடு தரையாக ஸ்டாண்ட்ஸ் எடுத்து பேட்டிங்க் ஆடிய அஷ்வின், தனது ஆட்டத்தில் பெரிதாக எந்த வித்தியாசமும் காட்டவில்லை. பெரிய ஷாட் ஆட முடியாமல் திணறினார். பவர்ப்ளேக்கு பிறகு ஒரு பவுண்டரியையும் சிக்ஸரையும் மட்டுமே அடித்திருந்தார். எதிர்கொண்ட கடைசி 25 பந்துகளில் 29 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.
அஷ்வின் ஒரு முனையில் நீண்ட நேரமாக நின்று ஆட, ஜெய்ஸ்வால் இன்னொரு முனையில் பவர்ப்ளே முடிந்த உடனேயே நடையைக் கட்டினார். மிட்செல் மார்ஸின் ஓவரில் 19 ரன்களை எடுத்த நிலையில் கேட்ச் ஆகியிருந்தார். இதன்பிறகு, நம்பர் 4-ல் வந்த படிக்கல் கொஞ்சம் நன்றாக ஆடினார். அஷ்வின் மெதுவாக ஆடியதை சமாளிக்கும் வகையில் படிக்கல் பேட்டை வீசி பெரிய ஷாட்களை ஆடியிருந்தார். அக்சர் படேலின் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களையும் பறக்கவிட்டிருந்தார்.
இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர் இல்லாமல்தான் டெல்லி அணி கடந்த போட்டியை சென்னைக்கு எதிராக தோற்றிருந்தது. இந்தப் போட்டியில் லலித் யாதவை லெவனுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். அப்படியிருந்தும் இடது கை பேட்ஸ்மேன்கள் ஆடும்போது அவருக்கு ஒரு ஓவரை கூட கொடுக்காமல் இருந்தது ஆச்சர்யம். அக்சர் படேல் இந்த சீசனிலேயே மொத்தமாக 4 விக்கெட்டுகளைத்தான் வீழ்த்தியிருக்கிறார். அதில் ஒன்றே ஒன்று மட்டும்தான் இடது கை பேட்ஸ்மேனுடைய விக்கெட். லலித் யாதவ் வீழ்த்தியிருக்கும் நான்கு விக்கெட்டுகளில் மூன்று பேர் இடதுகை பேட்ஸ்மேன்களே. எவின் லீவிஸ், தவான், நிதிஷ் ராணா எனப் பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அக்சர் படேலை ஓரமாக வைத்துவிட்டு அவருக்கு ஒரு ஓவரையாவது கொடுத்திருக்கலாம்.
6வது பௌலிங் ஆப்சனாக மிட்செல் மார்ஷ் நன்றாகவே வீசியிருந்தார். ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தியவர், அரைசதம் கடந்திருந்த அஷ்வினின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
சாம்சன், ரியான் பராக் போன்றோர் சிங்கிள் டிஜிட்டில் அவுட்டாக படிக்கல் அடித்த 48 ரன்களின் பலனாக ராஜஸ்தான் அணி 160 ரன்களை எட்டியது.
டெல்லிக்கு டார்கெட் 161. முதல் ஓவரை போல்ட் வீசுயிருந்தார். இரண்டாவது பந்திலேயே கே.எஸ்.பரத்தை எட்ஜ்ஜாக்கி வெளியேற்றினார். ஆட்டம் பரபரப்பாகச் செல்லும் என்ற எதிர்பார்ப்பை இந்த ஓவர் மூலம் போல்ட் ஏற்படுத்தினார். ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. மிகச்சுலபமாக டெல்லி அணி டார்கெட்டை சேஸ் செய்து முடித்தது.
நம்பர் 3 இல் களமிறங்கிய மிட்செல் மார்ஸூம் வார்னரும் 144 ரன்களுக்கு பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
ஆஸ்திரேலியாவிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த மிட்செல் மார்ஸ் டெல்லி அணிக்காக இதுவரை பெரிதாக ஒன்றுமே செய்யாமல் இருந்தார். சொதப்பல்களுக்கெல்லாம் சேர்த்து வைத்து ராஜஸ்தானுக்கு எதிராக பேட்டிங், பௌலிங் இரண்டிலும் அசத்திவிட்டார். 62 பந்துகளில் 89 ரன்களை அடித்திருந்தார். வார்னர் கொஞ்சம் நின்று ஆட விரும்புகிறார் என்பதை உணர்ந்து தொடக்கத்திலிருந்தே அட்டாக் செய்து ஆடிக்கொண்டிருந்தார்.
அஷ்வின், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் சென் என அத்தனை பேரின் பந்திலும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். வார்னர் இன்னொரு முனையில் தனது வழக்கமான ஸ்டைலில் வேக வேகமாக ஓடி ஓடி ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தார். லெக் ஸ்பின்னரான சஹால் வந்த பிறகே பெரிய ஷாட்களை ஆட ஆரம்பித்தார். நேர்த்தியாக ஆடிய இந்தக் கூட்டணியை கடைசி வரை பிரிக்கவே முடியவில்லை. ஏறக்குறைய இலக்கை எட்டிய சமயத்தில் மார்ஸூம் சதம் அடிப்பாரா எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், சஹாலின் பந்திலேயே கேட்ச்சாகி 89 ரன்களில் வெளியேறினார்.
என ஹர்ஷா போக்லே வேடிக்கையாக ஒரு ட்வீட் செய்திருந்தார். சஹால் மட்டுமில்லை. ஒட்டுமொத்த ராஜஸ்தான் அணியுமே லாட்டரியை தவறவிட்டு விட்டதென்றே சொல்ல வேண்டும். மார்ஸ் ஒரு ரன்னில் இருந்த போது போல்ட் ஒரு வெறித்தனமான யார்க்கரை இறக்கியிருப்பார். தட்டுத்தடுமாறிய மார்ஸ் இதை பேடில் வாங்கியிருப்பார். ஆனால், அது பேட்டில்தான் பட்டது என நம்பிய போல்ட்டும் சாம்சனும் ரிவ்யூவே எடுத்திருக்கமாட்டார்கள். ரீப்ளேவில் அது 100% அவுட் என்பது தெரிந்தது.
பின் சஹால் வீசிய ஒரு ஓவரில் லெக் ஸ்பின்னில் வார்னர் ஏமாற பந்து ஸ்டம்பை உரசி லைட்டே எரிந்தது. ஆனால், பெய்ல்ஸ் மட்டும் கீழே விழவில்லை. அதே ஓவரில் வார்னர், பட்லருக்கு ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுக்க பட்லர் அதை கோட்டைவிட்டிருப்பார். இது மூன்றில் எதாவது ஒன்று நிகழ்ந்திருந்தால் கூட ராஜஸ்தான் அணிக்கு லாட்டரி அடித்திருக்கக்கூடும். பச்ச்ச்… எதுவுமே நிகழவில்லையே.
மார்ஸ் அவுட் ஆன பிறகு ரிஷப் பண்ட் வேகவேகமாக பெரிய ஷாட்களை ஆடி அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல வைத்தார்.
ராஜஸ்தான் அணி அஷ்வினை நம்பர் 3 இல் இறக்கியது கொஞ்சம் சறுக்கலாக அமைந்ததை போல தோன்றியது. அஷ்வின் தன்னால் இயன்றவரை நன்றாகத்தான் ஆடினார். ஆனால், அணிக்கு அது போதவில்லை. ஹெட்மயர் போன்ற பேட்ஸ்மேன்கள் இல்லாததால் பேட்டிங் ஆர்டரை கொஞ்சம் நீள செய்யும் பொருட்டு அஷ்வின் நம்பர் 3 இல் இறக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு பேட்ஸ்மேன் குறைவாக ஆடுகிற இப்படியான சவாலான சமயங்களில் முக்கிய பேட்ஸ்மேன்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முன் வந்து உத்வேகத்துடன் ஆடியிருக்க வேண்டும். இங்கே அஷ்வினை முன் இறக்கிவிட்டு சாம்சன், ரியான் பராக் போன்றோர் டெத் ஓவரில்தான் க்ரீஸூக்கே வந்தனர். இது ராஜஸ்தான் அணிக்கு நல்ல ரிசல்ட்டை கொடுக்கவில்லை. சாம்சன், ரியான் பராக் போன்றோர் முன்னால் இறங்கியிருந்தால் எதோ முயன்றோம் போராடி பார்த்தோம் என்கிற திருப்தியாவது கிடைத்திருக்கும். இப்போது அதுவும் இல்லை.
கொஞ்சம் ரிஸ்க் எடுங்க சாம்சன் சேட்டா!