அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அண்மையில், நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, அஸ்ஸாம் மொழியில் பேசிக்கொண்டிருந்தவர், “பிரதமர் அமித் ஷா-வும், உள்துறை அமைச்சர் நரேந்திர மோடியும்” எனக் கூறினார். பின்னர், உடனே சுதாரித்து கொண்ட ஹிமந்தா பிஸ்வா சர்மா அதை மாற்றிப் பேசியதாகக் கூறப்படுகிறது. அவர் அமித் ஷாவை பிரதமர் எனக் கூறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர், “முதல்வர் வாய்த் தவறி பேசவில்லை… அவர் உள்நோக்கத்துடன் தான் பேசியிருக்கிறார்” என அவரின் பேச்சை விமர்சித்து வருகின்றனர். மறுபக்கம், “ஹிமந்தா பிஸ்வா சர்மா தவறுதலாகப் பேசிவிட்டார். எதிர்க்கட்சியினர் அவர் உள்நோக்கத்துடன் பேசியிருப்பதாக அவதூறு பரப்புகிறார்கள். அதில் உண்மையில்லை, அவர் வாய்த் தவறி மட்டுமே அப்படி பேசிவிட்டார்” என பா.ஜ.க-வினர் விளக்கமளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இது விவகாரம் தொடர்பாக அஸ்ஸாம் காங்கிரஸ், “ஹிமந்தா பிஸ்வா சர்மா அமித் ஷாவை `பிரதமர்’ என்று வேண்டுமென்றே அழைத்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக அமித் ஷாவை பிரதமராக உயர்த்துவதற்கான பிரசாரம் தொடங்கப்பட்டிருக்கிறதா..?!” என விமர்சித்திருக்கிறது.