சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு அருகிலுள்ள சிலுவம்பாளையம் என்ற கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பப் பின்னணியைக் கொண்ட எடப்பாடி பழனிசாமி. மே 12, 1954-ம் ஆண்டில் பிறந்தார்.
விலங்கியலில் பட்டப்படிப்பு சேர்ந்த இவரின் கல்லூரிப் படிப்பு, பாதியில் நின்றதையடுத்து, எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருக்கும் சந்தைகளில் வெல்ல வியாபாரம் செய்துவந்தார்.
எந்தவொரு அரசியல் பின்னனியும் இல்லாமல் இருந்த இவரை , அரசிலுக்குக் கொண்டுவந்து சேர்த்தவர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்தான். அதன் பிறகு அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழக அரசியலில் உச்சம் தொட்டவர்.
பழனிசாமி 1974-ல் கோணேரிப்பட்டி கிளைச் செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.1990-ல் சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர், 1991-ல் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர்.
1993-ல் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர், 2001-ல் தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் தலைவர், 2006-ல் கழகக் கொள்கைபரப்புச் செயலாளராகவும் படிப்படியாக உயர்ந்தார்.
பின்னர் 2011-ல் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராகவும், 2014-ம் ஆண்டு கழக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினராகவும், தலைமை நிலைய செயலாளராகவும், 2016-ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் அரசியலில் தடம் பதித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா சிறை சென்றதையடுத்து 2017-ல் அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதல்வராகப் பதவியேற்றார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு , அதிமுகவில் நிலவி வந்த குழப்பத்துக்கு மத்தியில், முதலமைச்சராக வாய்ப்புக் கிடைத்த சில மாதங்களிலேயே கட்சியையும், ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் பழனிசாமி.
காமராஜர், பக்தவத்சலம், கலைஞர் மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு அதிக நாட்கள் முதலமைச்சராக இருந்தவர் என்ற இலக்கை எட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இன்று 68- ஆவது பிறந்தநாள் காணும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் தங்களது ழ்த்துகளை தெரிவித்து வருகின்றன்ர்.