சென்னை:
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 1.9.2019ல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும்.
கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊதிய உயர்வு உடன்பாடு ஏற்படாமல் தள்ளிப் போனது. 2 வருடமாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு வழங்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 4வது கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நேற்று சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கினார்.
போக்குவரத்து செயலாளர் கோபால், நிதித்துறை கூடுதல் செயலாளர் சுந்தர் தயாளன், ஊதிய பேச்சுவார்த்தை கன்வீனரும், மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனருமான அன்பு ஆபிரகாம் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., பொருளாளர் நடராஜன், அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக் கண்ணன், தலைவர் தாடி மா.ராசு, சி.ஐ.டி.யு தொழிற்சங்க செயலாளர் சவுந்தர்ராஜன், ஏ.ஐ.டி.யு.சி. ஆறுமுகம், ஐ.என்.டி.யு.சி. விஷ்ணுபிரசாத உள்ளிட்ட 65 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அதிக பட்சமாக 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நீண்ட காலமாக பதவி உயர்விற்காக காத்திருப்போருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பேச்சுவார்த்தை நல்லமுறையில் சென்று கொண்ட இருப்பதாகவும், எடுத்தவுடனே கோரிக்கை தொடர்பாக உடன்படிக்கைக்கு அமைச்சர் வந்துள்ளார் என்றும் சி.ஐ.டி.யு தொழிற்சங்க செயலாளர் சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.