தமிழக அரசு, அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சுகாதாரத்துறையில் அரசு மருத்துவர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருவது பெரிதும் பாராட்டத்தக்கது.
இயற்கைச் சீற்றம், கொரோனா தொற்றுநோய் பரவல் உட்பட அசாதாரண சூழலில் அரசு மருத்துவர்களின் மக்கள் நலப்பணி பேருதவியாக இருக்கிறது.
பல மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக கிராமப்புற சுகாதார சேவையில் முதல் இடத்தில் இருக்கும் தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு சம்பந்தமாக உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் ஆகியவற்றில் ஈடுபட்டு அரசை வலியுறுத்தி வந்தாலும் இன்னும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இருப்பினும் அரசு மருத்துவர்கள் மக்கள் நலன் காக்கும் மருத்துவச் சேவையில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார்கள். அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரை பணியாற்றி வரும் அனைத்து மருத்துவர்களும் பலனடைவார்கள்.
மத்திய அரசு மருத்துவர்களை ஒப்பிடும்போது தமிழக அரசு மருத்துவர்களின் அடிப்படை ஊதியம் மிகவும் குறைவு. அதாவது 23.10.2009 தேதியிட்ட அரசாணை 354 – ன் எதிர்கால சரத்துக்களை அமல்படுத்தி தற்போதுள்ள 8,15,17,20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை 5,9,11,12 ஆண்டுகள் முடிந்தவுடன் கொடுக்குமாறும், 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் PB4-ஐ 12 ஆண்டுகள் முடிந்து 13-ம் ஆண்டு துவக்கத்தில் கொடுக்குமாறும் கேட்கின்றனர்.
குறிப்பாக கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் எம்.பி.பி.எஸ் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் குறைவாக ஊதியம் வழங்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெரிவித்தார்கள். ஆனால் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையின் போது எதிர்பார்க்கப்பட்ட அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. எனவே தமிழக அரசு, தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றுவோம் என்று அறிவித்த அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையான ஊதியக் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்றினால் மருத்துவர்கள் ஊக்கமடைந்து தொடர்ந்து உற்சாகத்தோடு மருத்துவப் பணியில் ஈடுபடுவார்கள் என்று த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.