திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் ஆலப்புழாவை அடுத்த பருமலா, மன்னார் பகுதியில் பிரபல ஜவுளி கடை ஒன்று உள்ளது.
இந்த கடையில் நேற்று இரவு விற்பனை முடிந்த பின்பு ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்றனர். இன்று அதிகாலை கடையின் 3-வது மாடியில் இருந்து கரும்புகை வந்தது.
இதனை கண்ட காவலாளி, இது பற்றி கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்து தீ அணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் ஜவுளி கடையின் 3-வது மாடி தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிகள் மற்றும் பொருள்கள் அனைத்தும் கொளுந்து விட்டு எரிந்தது.
அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் மளமளவென பரவியது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.
மேலும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் தீ பரவி விடாமல் தடுக்கும் பணியிலும் ஈடுபட்டனர். அதிகாலை நேரம் என்பதால் கட்டிடத்தில் ஊழியர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதற்கிடையே விபத்து பற்றி தெரியவந்ததும் ஆலப்புழா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.