இதுதான் உங்களின் வலிமை… சிறுமியுடன் உரையாடியபோது உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி

புதுடெல்லி:
குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில், பயனாளிகளுக்கு அரசின் நிதியுதவி கிடைக்க வகைசெய்யும் மாநில அரசின் நான்கு முக்கிய திட்டங்கள் 100 சதவீதம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக முன்னேற்றப் பெருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். பயனாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் மகளுடன் உரையாடியபோது பிரதமர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். 
பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவரிடம் பேசியபோது, ‘உங்கள் மகள்களை படிக்க வைக்கிறீர்களா? என்ன படிக்கிறார்கள்?’ என்று கேட்டார் பிரதமர். இதற்கு பதிலளித்த மாற்றுத்திறனாளி, தனது மூன்று மகள்களில் ஒருவர் மருத்துவர் ஆவதற்கு விரும்புவதாக கூறினார்.

இதையடுத்து அவரது மகளிடம் பேசிய பிரதமர், ‘மருத்துவ தொழிலை தேர்ந்து எடுத்ததற்கு காரணம் என்ன?’ என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அந்த சிறுமி, ‘என் தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு, அவர் படும் அவஸ்தைகளைப் பார்த்து நான் டாக்டராக ஆசைப்பட்டேன்’ என்றார். அத்துடன் தன் தந்தையின் தோளில் சாய்ந்தபடி கண்ணீர் விட்டு அழுதார். 
சிறுமியின் பதிலைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடிக்கு, மேற்கொண்டு பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அந்த சிறுமியன் மன உறுதியை பாராட்டிய மோடி, ‘இந்த கருணைதான் உங்களின் வலிமை’ என்றார்.
அதன்பின் சிறுமியின் தந்தையிடம் பேசிய பிரதமர், “உங்கள் மகள்களின் கனவை நனவாக்க உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் சொல்லுங்கள், செய்கிறேன்” என்று நம்பிக்கை அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.