இந்திய தூதரகம் திட்டவட்ட அறிவிப்பு| Dinamalar

கொழும்பு,:’இலங்கையில் வன்முறையை அடக்க, ராணுவத்தை அனுப்பும் பேச்சுக்கே இடமில்லை’ என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ஆளுங்கட்சியினருக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிறுவனங்களை மக்கள் தீவைத்து எரிக்கும் சம்பவங்களும், வன்முறைகளும் தினமும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், ‘இலங்கையில் வன்முறையை கட்டுப்படுத்த, இந்திய ராணுவம் வர உள்ளது’ என சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதேபோல், மகிந்த ராஜபக்சே தன் குடும்பத்துடன் இந்தியாவில் அடைக்கலம் கேட்டு தப்பி விட்டதாகவும் செய்தி பரவியது.
இச்செய்திகளை மறுத்து, இலங்கைக்கான இந்திய துாதரகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியா, இலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப உள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் வரும் தகவல்களை மறுக்கிறோம். இந்த தகவல் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானது. ‘இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்காக இந்தியா உறுதுணையாக இருக்கும்’ என, இந்திய வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
சில அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவுக்கு தப்பி சென்றிருப்பதாகவும் செய்திகள் பரவுகின்றன. இவை பொய்யான தகவல்கள்; உள்நோக்கத்துடன் சொல்லப்படுபவை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவதால், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர், திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் பதுங்கி உள்ளனர்.
இது பற்றி இலங்கை ராணுவ அமைச்சக செயலர் கமல் குணரத்னே கூறியதாவது:பாதுகாப்பு காரணங்களுக்காகவே மகிந்த ராஜபக்சே, கடற்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது அதிகாரப்பூர்வ இல்லம் தாக்கப்பட்டதையடுத்து, கடற்படை தளத்திற்கு அழைத்து சென்றோம். நிலைமை சீரானதும், அவர் விரும்பும் இல்லத்திற்கு அழைத்து செல்லப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், இலங்கையில் நேற்று முன்தினம் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு இதுவரை எட்டு பேர் இறந்துள்ளனர்.பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், கலவரத்தில் ஈடுபடுவோர் மீதும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த, முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
”இலங்கையில் அமைதியை கடைப்பிடிக்கவும், சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என ராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்து உள்ளார்.வன்முறையை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருந்தாலும், பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது.’பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு, எழுத்துப் பூர்வமானஉத்தரவை பெற வேண்டும்’ என, போலீசார் அறிவித்துள்ளனர்.வன்முறையை கட்டுப்படுத்த, நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கை கடுமையாக்க, இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.