இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலை சுற்றி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. தாஜ்மஹால் கட்டுப்பட்டுள்ள இடத்தில் சிவன் கோயிலிருந்தது, இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அதை அழித்து, அதன் மேலேயே தாஜ்மஹாலைக் கட்டியுள்ளனர் எனவும், தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளமே அல்ல எனவும் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் சில சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக இளைஞர் ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய மனுதாரர் தரப்பு, “தாஜ்மஹால் தொடர்பான உண்மையை அறியும் உரிமை மக்களுக்கு உண்டு. அதன் அடிப்படையில் தாஜ்மஹாலில் பூட்டியுள்ள 22 அறைகளின் கதவும் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக தொல்லியல் துறையிடம் பல மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் வரலாறு அதன் வயது தொடர்பாக உள்ள சந்தேகங்கள் தொடர்பான சில ஆவணங்களையும் இணைத்துள்ளேன்”என வாதிட்டார்.
இந்த வாதத்துக்குக் கடுமையான ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள், “தாஜ்மஹால் வயதில் சந்தேகம் என்றால் அதை ஷாஜஹான் கட்டவில்லை எனக் குறிப்பிடுகிறீர்களா? தற்போது தாஜ்மஹால் யார் கட்டியது என்பதை ஆய்வு செய்யவா இப்போது கூடியிருக்கிறோம்? வரலாற்றுத் தரவுகள் தொடர்பாகப் பேச விரும்பவில்லை. மேலும், எதன் அடிப்படையில், எந்த உரிமையில் தாஜ்மஹாலின் அறைக்கதவைத் திறக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்?” எனக் கேள்விகளைத் தொடர்ந்தனர்.
இதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, “நாட்டின் குடிமகன் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்” எனக் கூறியதற்கு நீதிபதிகள்,”தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு விஷயம் தொடர்பான தரவுகளைத் தான் அறியமுடியும். ஆனால் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும், ஆராய்ச்சி செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த சட்டத்தில் எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினர். இதற்கும் பதிலளித்த மனுதாரர், “உண்மை அறியும் குழு அமைத்து தாஜ்மஹால் குறித்தான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் நமக்குத் தவறான வரலாறு கற்றுத்தரப்பட்டிருந்தால் திருத்தப்பட வேண்டும். மேலும், பூட்டப்பட்ட அறைகளுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்” என வாதிட்டார்.
இந்த வாதத்துக்குப் பின் நீதிபதிகள்,”தாஜ்மஹால் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் ஆய்வு செய்ய எம்.ஏ, நெட், ஜே.ஆர்.எஃப் உள்ளிட்ட படிப்புகளில் உங்களை இணைத்துக் கொண்டு ஆய்வை மேற்கொள்ளுங்கள். அதில் அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றம் வாருங்கள். இன்று தாஜ்மஹால் அறையை திறக்க சொல்கிறீர்கள், நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோருவீர்களா? பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிக்கூத்தாக்காதீர்கள். நீதிமன்றத்தில் இது போன்று நடந்துகொள்ளாதீர்கள். மேலும், எந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கூறினீர்கள் என விளக்கமளியுங்கள்” எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.