சென்னை:
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த அரிசி அதிகவிலைக்கு வாங்கப்படுவதாக கூறி, திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஒரு கிலோ அரிசி 33 ரூபாய் 50 காசுகள் என்ற அடிப்படையில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய 134 கோடி ரூபாயை ஒதுக்கி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்திய உணவு கழகம் ஒரு கிலோ அரிசியை 20 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கிறது. அங்கு இருந்து அரிசி கொள்முதல் செய்யும் பட்சத்தில் 54 கோடி ரூபாய் மிச்சமாகும்.
இதுசம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிய போது, இந்திய உணவு கழக அரிசி தரமற்றது. அரிசி கொள்முதல் செய்வது தொடர்பான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தை பின்பற்றாமல், அதிக விலைக்கு அரிசி கொள்முதல் செய்வது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் .
அரிசி கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்து பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், மத்திய அரசின் அனுமதியுடன் தான் அரிசி அனுப்பப்படுகிறது.
அவசர நிலை நேரங்களில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் விலக்கு உள்ளது என்று கூறினார்.