கொழும்பு,
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும் என்று கூறி தொடர் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்துக்கு அடிபணிந்த மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அறிவித்திருந்தார். தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சி தலைவராவன ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் 15 பேரை கொண்ட புதிய அமைச்சரவையும் நாளை பொறுப்பேற்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிற்கு வாழ்த்துகள். இந்த இக்கட்டான சூழலில் நாட்டை சிறப்பாக வழிநடத்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.
Congratulations to the newly appointed Prime Minister of #lka, @RW_UNP. I wish you all the best as you navigate these troubled times.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) May 12, 2022