திருவாரூர்: தமிழகத்தில் நடைபெறும் அறிவாலய குடும்ப ஆட்சி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தமிழகத்திலும் ஏற்படும் என, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தெற்கு வீதிக்கு கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக முன்னாள் திருவாரூர் மாவட்ட தலைவர் ராகவன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மற்றும் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டுவது, ஊர் பெயர்களை மாற்றுவது என இரண்டு வியாதிகள் பிடித்திருக்கின்றன. இந்த வியாதி காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது. அதன் காரணமாக குடும்பத்தினரின் பெயரை அவர்கள் சூட்டினார்கள். தற்போது அந்த வியாதி திமுகவுக்கும் வந்துவிட்டது.
பிரதமர் மோடி, கோடிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த போதிலும், ஒரு திட்டத்துக்கு கூட தனது பெயரை வைக்காமல் நாட்டு மக்களின் நலன் சொல்கின்ற பெயர் சூட்டினார். இத்தகைய நிலையில் திருவாரூரில் தியாகராஜர் தேரோடும் வீதிக்கு கருணாநிதியின் பெயரை சூட்ட நினைப்பது கண்டிக்கத்தக்கது.
திருவாரூர் தெற்கு வீதி என்பது, ஆசியாவிலேயே புகழ்மிக்க ஆழித் தேரோடும் வீதி. பல்லாயிரக்கணக்கான பெரியவர்கள், ஆன்மீக எண்ணத்தோடு நடந்து வந்துள்ளார்கள். குறிப்பாக மனுநீதிச் சோழன் இந்த மண்ணை ஆண்ட போது, பசுவின் கன்று, தனது மகன் வீதிவிடங்கன் ஓட்டிய ரதத்தில் அடிபட்டு இறந்துவிட்டது என்று, ஆராய்ச்சி மணியை அடித்து பசு சொன்ன போது, ஏதேனும் யாகம் வளர்த்து, பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்று அமைச்சர்கள் அறிவுரை கூறிய போது, தனது மகனை தேர்க்காலில் வைத்து கொலை செய்து நீதி வழங்கினார்.
அத்தகைய மன்னன் இந்த தெற்கு வீதியில் கூட பவனி வந்து இருப்பார். இத்தகைய ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பெருமையை கொண்ட இந்த வீதிக்கு, கருணாநிதியின் பெயரை சூட்டுவது சரியல்ல. மனுநீதிச் சோழன் பெயரை மாற்றினால் கூட பாஜக அதனை ஏற்றுக் கொள்ளும். கருணாநிதியின் பெயர் சூட்ட வேண்டும் என்றால், தமிழகத்தில் சாலை வசதி இல்லாமல் எத்தனையோ கிராமங்களில், மக்கள் அல்லல்பட்டு வருகிறார்கள். அங்கு சாலை வசதியை ஏற்படுத்தி, அந்த சாலைக்கு கருணாநிதியின் பெயரை சூட்டுங்கள். இதனையும் மீறி, கருணாநிதியின் பெயரை இந்த சாலைக்கு சூட்டினால், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்ச்சியாக செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்படும்.
திருமாவளவன் கொழும்புவில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற நிலை இந்தியாவிலும் வரும் என தெரிவிக்கிறார். இந்த நிலை தமிழகத்திற்கு வரும். ஏனெனில் கொழும்புவில் முழுக்க முழுக்க குடும்ப அரசியலை நடைபெற்று வந்தது ராஜபக்சேவின் குடும்பத்தில் ஒருவர் அதிபர் மற்றொருவர் பிரதமர் மற்றொருவர் முதல்வர் அவரது மகன்கள் அமைச்சர்களாகவும் எம்பிக்களாகவும் பதவி வகித்தனர். குடும்ப ஆட்சியின் காரணமாக அனைத்து அரசு சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு ஒரே குடும்பத்துக்கு சென்றது. இதன் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இலங்கை மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது.
திருமாவளவன் தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும் தமிழகத்தில் தற்போது ஆண்டு கொண்டிருக்கிற அறிவாலயம் குடும்பம் குறித்த குடும்ப வரைபடத்தை வரைந்து பார்த்தால் யார் யார் எந்தெந்த பதவியில் இருக்கிறார்கள் என்பது நன்கு தெரியும். இருப்பினும் பிரதமர் மோடி வரும் 2024 தேர்தலில் இதுபோன்ற நிலைக்கு எல்லாம் நாடு சென்று விடாமல் அறிவாலயம் குடும்பம், சரத்பவார் குடும்பம், தாக்கரே குடும்பம் உள்ளிட்ட அனைத்து குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து உலகம் போற்றும் தலைவராக உருவெடுப்பார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.