வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கை பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று (மே 12) மாலை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் வீடுகளை சூறையாடிய மக்கள் தீவைத்தனர். இதனால், மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இந்நிலையில், இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும். அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யாவிட்டால், பதவியில் இருந்து விலகுவேன் என அந்நாட்டு மத்திய வங்கி கவர்னர் கூறியிருந்தார். நேற்று மாலை, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை புதிய பிரதமராக நியமிக்க கோத்தபய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இன்று மாலை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இன்று பதவியேற்றால், புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும் எனவும் கூறப்படுகிறது.
பிரதமர் பதவி தொடர்பாக, ரணில் விக்கிரமசிங்கேவுடன் கோத்தபய தொலைபேசியில் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அப்போது, குறுகிய காலத்திற்காவது பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்ற கோத்தபயவின் கோரிக்கையை ரணில் ஏற்று கொண்டுள்ளார். ரணிலை பிரதமராக்குவதற்கு, பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பொன்சேகா மறுப்பு
இதனிடையே, முன்னாள் ராணுவ தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எம்.பி.,யான சரத் பொன்சேகா பிரதமராக பதவியேற்பார் என தகவல் வெளியானது. ஆனால், இதனை மறுத்துள்ள பொன்சேகா, பொய் பிரசாரங்கள் மூலம் மக்களை திசைதிருப்ப முயற்சி நடக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். கோத்தபய அதிபராக இருக்கும் வரை, அரசில் எந்தவொரு பதவியையும் ஏற்க மாட்டேன். என தெரிவித்துள்ளார்.
Advertisement