கொழும்பு: இலங்கையில் நிலவிவரும் நெருக்கடியான சூழலில் அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றார். இதைத் தொடர்ந்து 15 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. இதனிடையே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட 17 பேர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இலங்கை முழுவதும் கலவரம் வெடித்தது. மக்களின் எதிர்ப்பு வலுத்ததால் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் கலவரம் நீடித்தது.
மகிந்த ராஜபக்சவின் வீடு உட்பட ஆளும் கட்சி தலைவர்களின் வீடு, அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஆளும் கட்சி எம்.பி. உட்பட இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோரை சுட்டுத் தள்ள முப்படைகளுக்கும் போலீஸாருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில் நேற்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்டது. மளிகைக் கடைகள், பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். அரசு அலுவலகங்கள், வங்கிகள் மதியம் 12 மணி வரை மட்டும் இயங்கின. பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியுடன் வன்முறை, கலவரமும் தலைதூக்கியிருப்பதால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது.
6-வது முறையாக ரணில் பதவியேற்பு
இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆலோசனை நடத்தினார். இதில் உடன்பாடு எட்டப்பட்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த 15 அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில், ரணில் கட்சிக்கு ஒரு எம்.பி. மட்டுமே உள்ளார். அவர் மட்டுமே எம்.பி.யாக பதவி வகிக்கிறார். மகிந்த ராஜபக்ச வின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கூட்டணியின் 143 எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு அளிக்க உள்ளனர். மேலும் பல்வேறு கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, நாடாளுமன்றத்தில் ரணில் எளிதாக பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க ஏற்கெனவே 5 முறை இலங்கை பிரதமராக பதவி வகித்துள்ளார். நெருக்கடியான நேரத்தில் தற்போது 6-வது முறையாக பிரதமராகியுள்ள அவர் நாட்டை திறம்பட வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கடந்த 9-ம் தேதி கலவரத்துக்கு காரணமான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நமல் ராஜபக்ச, பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, காஞ்சன ஜெயரத்ன, போலீஸ் அதிகாரி தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 17 பேர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்தார்.
பாதுகாப்பு கருதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திரிகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், “மகிந்த ராஜபக்ச நாட்டில் இல்லை. அவர் புதன்கிழமை நள்ளிரவு அவன்கார்ட் கப்பல் மூலம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்” என்று இலங்கையின் முன்னணி அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார். ஆனால் இதை ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச மறுத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமரானது எப்படி?
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 143 எம்.பி.க்கள் உள்ளனர். இதற்கு அடுத்து ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 எம்.பி.க்கள் உள்ளனர்.
அரசுக்கு எதிரான போராட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்னின்று நடத்தி வருகிறார். பிரதமர் பதவியை ஏற்க அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் அவர் சில நிபந்தனைகளை விதித்தார். குறிப்பிட்ட கால வரம்புக்குள் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும். அதிபர் அதிகார நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை சஜித் பிரேமதாசா விதித்திருந்தார்.
இவற்றை ஏற்காத கோத்தபய ராஜபக்ச, மிதவாதியான ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க காய் நகர்த்தினார். ரணில் பிரதமராக இருந்தால் தனது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாது. குறிப்பாக அண்ணன் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியும். தனது பதவிக்கும் ஆபத்து ஏற்படாது என்பது அதிபரின் கணக்கு.
மேலும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை பலவீனப்படுத்த அந்த கட்சியின் 25 எம்.பி.க்களை இழுக்க அதிபர் கோத்தபய தீவிர முயற்சி செய்து வருகிறார். புதிய பிரதமர் ரணிலுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, புதிய அரசில் இணைய மாட்டோம் என்று உறுதிபட கூறியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறும்போது, “ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கவே ரணில் பிரதமராக ஆக்கப்பட்டுள்ளார். நாங்கள் ரணிலை ஆதரிக்கவில்லை” என்றார்.
போராட்டத்தை ஒடுக்க அதிபர் கோத்தபய திரைமறைவில் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். எனினும், மக்களின் ஒட்டுமொத்த கோபமும் ராஜபக்ச குடும்பத்தின் மீது திரும்பியிருப்பதால் அந்த குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகவே உள்ளது.