உக்ரைன் போர் காரணமாக உலகின் பல பகுதிகளில் பட்டினி பரவி வருவதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரேஸ் பேசும்போது, “உக்ரைனில் போர் பதற்றமிக்க பகுதிகளிலிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. எதிர்காலத்திலும் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். உக்ரைனில் நடந்த போரின் காரணமாக நாம் எதிர்கொள்ளும் வியத்தகு உணவுப் பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தல்களினால் உலகின் பல்வேறு பகுதிகளில் பட்டினி அபாயங்கள் பரவலாகி வருகின்றன. இதுகுறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்” என்றார்.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் காரணமாக இதுவரை 4,50,000 பேர் வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. முதலிடத்தில் உக்ரைன் உள்ளது. போர் காரணமாக இங்கிருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அங்குள்ள உள்கட்டமைப்புகள் நாசமாகி உள்ளன. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. இதனால் உக்ரைனால் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர் 2 மாதங்களைத் தாண்டியும் நீடித்தபடி உள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல், தலைநகரான கீவ் ஆகியவை முற்றிலும் உருக்குலைந்து போய் உள்ளன. சில நாட்கள் முன்பு மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.