சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உச்சநீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் மூத்த நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், சத்திகுமார்சுகுமார குரூப், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவி வகித்து வரும் ஏ.ஏ.நக்கீரனை, வரும் டிச.3-ம் தேதி முதல் மேலும் ஓராண்டுக்கு கூடுதல் நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் முடிவு செய்துள்ளது.