குஜராத்: எனது கனவு மிகப்பெரியது. பயனாளிகளின் 100 சதவீத பயன்பாட்டை நோக்கி நாம் நகர்ந்து செல்ல வேண்டும். அரசு இயந்திரம் அதற்கேற்ப மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பயனாளிகளின் 100 சதவீத பயன்பாடு என்பது அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் என்ற முழக்கத்துடன் ஒவ்வொரு மதம், பிரிவிற்கும் அனைத்தையும் சமமாக வழங்குவதாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பரூச்-ல் நடந்த முன்னேற்றப் பெருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார். தேவையுள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் நிதியுதவி வழங்கும், மாநில அரசின் நான்கு முக்கிய திட்டங்களின் 100 சதவீத பயன்பாட்டைக் குறிக்கும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். நாட்டில் பெண்கள் எளிதாகவும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கு வழி செய்ததற்காக, பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்தி, மிகப் பெரிய ராக்கியை அப்பிராந்திய பெண்கள் வழங்கினர். பின்னர் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன் பெறும் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே உரையாற்றிய பிரதமர், “இன்றைய முன்னேற்றப்பெருவிழா, உறுதிப்பாட்டுடன் பயனாளியை உண்மை உணர்வுடன் அரசு சென்றடையும் போது, அர்த்தமுள்ள பலன்கள் கிடைக்கின்றன என்பதற்கு சான்றாகும். சமூக பாதுகாப்பு தொடர்பான 4 திட்டங்களும் முழு அளவில் செயல்படுத்தப்பட்டு இருப்பதற்கு குஜராத் அரசுக்கும், பரூச் மாவட்ட நிர்வாகத்துக்கும் பாராட்டுக்கள். பயனாளிகளிடையே நம்பிக்கையும், மனநிறைவும் காணப்படுகிறது. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த பலருக்கு தகவல் தெரியாமல் பல திட்டங்களின் பயன்கள் அவர்களுக்கு கிடைக்காமல் உள்ளது. அனைவரும் இணைவோம் அனைவரின் நம்பிக்கை என்ற உணர்வுடன் நேர்மையான எண்ணம் இருந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
கடந்த 8 ஆண்டு கால அரசு சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. பற்றாக்குறை, வளர்ச்சி மற்றும் வறுமை பற்றி கற்றுக்கொண்ட மக்களில் ஒருவராக எனது அனுபவமே நிர்வாகத்தின் வெற்றிகளுக்கு காரணம். சாமானியர்களின் ஏழ்மை மற்றும் தேவைகள் குறித்த தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் நான் பணிபுரிகிறேன். தகுதியுள்ள ஒவ்வொருவரும் இத்திட்டத்தின் முழுப் பலனைப் பெற வேண்டும். கிடைத்திருக்கும் பெருமைகளை எண்ணி அதிலேயே லயித்திருக்கக் கூடாது என்று குஜராத் மண் எனக்கு கற்பித்திருக்கிறது. மக்களின் நலனை முழுமையாக நிறைவேற்றுவதையே எப்போதும் நோக்கமாகக் கொண்டிருக்கிறேன். எனது உச்ச கனவு. 100 சதவீத முழு ஆற்றல் எல்லையை நோக்கி நாம் செல்ல வேண்டும். அரசு இயந்திரம் இதற்கேற்ப மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
2014-ஆம் ஆண்டில் நாட்டு மக்கள்தொகையில் பாதிபேருக்கு, கழிவறைகள், தடுப்பூசி, மின்சார இணைப்பு, வங்கிக் கணக்குகள் போன்ற வசதிகள் இல்லாமல் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொருவரும் முயற்சியுடன் பல திட்டங்களை 100 சதவீத பயன்பாட்டிற்கு நம்மால் கொண்டுவர முடிந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு, நாம் புதிய உறுதிப்பாட்டுடன் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பயனாளிகளின் 100 சதவீத பயன்பாடு என்பது அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் என்ற மந்திரத்துடன் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு பிரிவிற்கும சமமாக வழங்குவதாகும். ஏழைகளின் நலனுக்கான ஒவ்வொரு திட்டத்திலிருந்தும் யாரும் விடுபட்டுவிடக் கூடாது. இதனால் அரசியல் ரீதியாக திருப்திப்படுத்துவதையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. உச்சபட்சம் என்பது சமுதாயத்தின் கடைசி மனிதனையும் பயன் சென்றடைவதாகும்” என்றார்.
தனது உரையின் போது, அப்பிராந்தியத்தின் சகோதரிகள் வழங்கிய ராக்கி பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், “இதன் மூலம் தமக்கு வலிமையை வழங்கிய பெண்களுக்கு நன்றி. அவர்களது வாழ்த்துக்கள் கேடயம் போல தம்மைக் காப்பதுடன் மேலும் கடினமாக உழைக்க உந்துசக்தியாக இருக்கும். ஒவ்வொருவரின் முயற்சிகள் மற்றும் நம்பிக்கையின் பயனாக, செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து உச்சபச்ச நோக்கத்தை தம்மால் அறிவிக்க முடிந்தது என்றும், இது சமூகப்பாதுகாப்புக் குறித்த மிகப் பெரிய திட்டம். இந்தப் பிரச்சாரம் ஏழைகளின் கண்ணியம் என்றும் தெரிவித்தார். குஜராத்தி மொழியில் உரையாற்றிய பிரதமர், பரூச்சின் வர்த்தகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் பரூச்வுடனான தமது நீண்ட தொடர்பையும் அவர் நினைவு கூர்ந்தார்.
நிகழ்ச்சியில் பார்வையற்ற பயனாளி ஒருவருடன் கலந்துரையாடிய பிரதமர், அவரது மகள்களின் கல்வி குறித்து விசாரித்தார். பயனாளியின் பார்வைச் சவால் குறித்து அவரது மகள் உணர்ச்சிவசப்பட்டார். இதனால் உணர்ச்சி மேலிட பிரதமர் அவரது உணர்வே பலம் என்று கூறினார். தொடர்ந்து அவரும் அவரது குடும்பத்தினரும் ஈத் பண்டிகையை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை கேட்டறிந்தார். தடுப்பூசி போட்டுக் கொண்டதற்காகவும், மகள்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவும், பயனாளிக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
பெண் பயனாளி ஒருவருடன் கலந்துரையாடிய பிரதமர் அவரது வாழ்க்கைக் குறித்து கேட்டறிந்தார். கண்ணியத்துடன் வாழ்க்கையை நடத்தி வரும் அவரது உறுதிப்பாட்டை, பிரதமர் பாராட்டினார். தனது குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கையை அளித்து வரும் தனது வாழ்க்கைப் பயணம் குறித்து பிரதமரிடம் கணவனை இழந்த ஒரு இளம் பெண் கூறினார். சிறு சேமிப்பை மேற்கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை வழங்கிய பிரதமர், அவரது உறுதியான பயணத்திற்கு உதவுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.