‘சிற்பிகளின் கனவு’ என்று போற்றப்படும் ஒரே ஒரு கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் என்கிறது வரலாறு. ஆலயத்தின் முகப்பு தொடங்கி இண்டு இடுக்கெல்லாம் அழகிய சிற்பங்கள் மலிந்து கிடக்கும் உன்னதக் கோயில் இது. அதனால்தான் யுனெஸ்கோவால், உலக பாரம்பரியச் சின்னமாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்களைக் கொண்ட அபூர்வ கோயில் இது.
தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில் ஆகிய மூன்றும் சோழர்களின் பெருமை சொல்லும் அழியாத பெருங்கோயில்கள் என்று போற்றப்படுகின்றன. இரண்டாம் ராஜராஜ சோழனால், 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் ஆதியில் ராஜராஜேஸ்வரம் என்றும் சுவாமியின் பெயர் ராஜராஜப் பெருவுடையார் என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் ஐராவதேஸ்வரம் என்றும் ஐராவதேஸ்வரர் என்றும் மாற்றப்பட்டது என்று வரலாறு கூறுகின்றது. இந்திரனின் யானையான ஐராவதம் வழிபட்டு சாபம் நீங்கிய தலம் என்பதால் இந்த கோயில் ஐராவதீஸ்வரர் கோயில் என்றானதாகச் சொல்கிறார்கள். ஆலய முகப்பு, அர்த்த மண்டபம், முகமண்டபம், ராஜகம்பீர மண்டபம், விமானம், கருவறை மண்டபம் என எங்கு நோக்கினும் அழகும் பிரமாண்டமும் நெஞ்சை அள்ளும். புதுவிதமான சிவப்பு கற்களால் திரண்டிருக்கும் இந்த கோயில் மனித முயற்சியால் உருவானது என்றால் நம்புவது சிரமமாகத்தான் இருக்கும்.
தாரகாசுரன் வழிபட்டு வரம் பெற்ற தலம் என்பதாலும் இது ஐராவதேஸ்வரம் என்று ஆனதாகவும் கூறப்படுகிறது. தேர் வடிவிலான இந்த கோயிலை யானைகள் இழுத்துச் செல்வதுபோல அமைந்துள்ளது. இதனால் இது கரக்கோயில் எனப்படுகிறது. ஐராவதம் என்ற யானையைக் குறிக்கவென்றோ தெரியவில்லை, காணும் இடம் எங்கும் பல பிரமாண்ட யானை சிற்பங்கள் விதவிதமாக இங்குக் காட்சி அளிக்கின்றன. கோயில் கருவறையைச் சுற்றி 63 நாயன்மார்களுடைய சிற்பங்கள் வரலாறாக வடிக்கப்பட்டுள்ளன. திருச்சுற்று மாளிகையின் வடக்கே 108 சிவாசார்யர்கள் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. நடன வகைகளையும், வீர விளையாட்டுகளையும், போர்க்காட்சிகளையும் விவரிக்கும் சிற்பங்கள் யாவும் இங்கே அணிவகுத்து நின்றுள்ளன.
விரல் நுனி அளவில் தொடங்கி விரல், கை, முழம், முழங்கை பிறகு எட்டு வகையிலான எட்டு தாளம், நவ தாளம், தச தாளம் என எல்லாவகை அளவுகளிலும் சிற்பங்களைக் கொண்ட அதிசய கோயில் இது. சோழர்களின் போர் முறை, சிற்பம், ஆடல், கட்டுமானம், பக்தி, கட்டடம், வானவியல், ஐதீகம், புராணங்கள், சிவதத்துவம் என அனைத்தையும் சிற்பங்களாக தன்னுள் வைத்திருக்கும் பிரமாண்ட ஆலயம் இது. அடிக்கு 1000 சிற்பங்கள் என்ற புகழ் மொழியையும் கொண்ட கோயில் இது.
கவிச்சக்கரவர்தி ஒட்டக்கூத்தர், தன்னுடைய தக்கயாகப் பரணியில் பெரும் சினம் கொண்ட வீரபத்திரரால் தக்கன் யாகம் அழிந்து சகலரும் தண்டிக்கப்பட்டனர். அப்போது அங்கே ஈசனார் தோன்றி, அன்னை சக்திக்கு போர்க்களம் காட்டி, இறந்துபோன உயிர்கள் யாவருக்கும் அருள்புரிந்து ராசராசபுரி இத்தலத்தில் எழுந்தருளினார் என்று குறிப்பிடுகிறார். இரண்டாம் ராஜராஜன் காலத்தில் ராஜராஜேஸ்வரம் என்ற இந்த ஊர், பிறகு தெலுங்கு மன்னர்கள் காலத்தில் ராராசுரம் என்றாகி, அதுவே தாராசுரம் என்றானதாகவும் தகவல் உண்டு. தக்கயாகப் பரணி இங்குதான் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்றும் கூறுவார். யமதர்மன் பெற்ற சாபத்தால் உடல் எரிச்சல் கொண்டான். அவன் இங்குள்ள குளத்தில் நீராடி நலம் பெற்றதால், இங்குள்ள குளம் எமதீர்த்தம் எனப்படுகிறது. தெய்வநாயகி அம்மன் இங்குள்ள இறைவி.
இங்கு 30 கல்வெட்டுகள் உள்ளன. கோயிலின் கிழக்கு பிராகாரச் சுவரில் உள்ள கல்வெட்டும், ராச கம்பீர மண்டபத்தில் உள்ள கல்வெட்டும் இந்த கோயிலைக் கட்டியவன் இரண்டாம் ராஜராஜனே என்று அறிவிக்கின்றன. இங்குள்ள துவாரபாலகர் சிலைகள் சாளுக்கிய நாட்டின் தலைநகரான கல்யாணியில் இருந்து கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கோயிலுக்கு வெளியே நந்தி மண்டபத்துக்கு அருகே பலிபீடத்துக்கு ஏறும் படிகள் ஏழு ஸ்வரங்களை இசைக்கும் இன்னிசைப் படிகளாக அமைந்து உள்ளன. சாளக்கிராம லிங்கம், வீணையில்லாத வாணி, நாக அரசனான நாகராஜன், அன்னபூரணி, மெல்லிய காலணி அணிந்த கண்ணப்பர், அர்த்தநாரீஸ்வரர், குழல் ஊதும் சிவனார் என இங்கே அபூர்வ சிற்பங்களின் எண்ணிக்கை ஏராளம், ஏராளம்! கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் ஆலயம் வாழ்வில் ஒருமுறையேனும் காண வேண்டிய அற்புதமான தலம்.
சரித்திரத்தின் பிரமாண்ட பிரவாகத்தை தன்னுள் வைத்திருக்கும் தாராசுரம் கோயிலின் பெருமைகள் காணக் காண பிரமிப்பு அடையச் செய்பவை. இங்கு காணவும் கற்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. எனவே வாருங்கள் சோழர் உலாவுக்கு! சரித்திரமும் சமயமும் கலந்த யாத்திரை உங்களை அழைக்கிறது.
முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு: 97909 90404, 73974 30999