புதுடெல்லி,
கொரோனா குறித்த சர்வதேச உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியது இது 2-வது முறையாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்த உச்சி மாநாட்டில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது;-
கொரோனா பெருந்தொற்று இன்னமும் வாழ்க்கை முறையை, விநியோகச் சங்கிலி மற்றும் மக்களின் சமூக நடவடிக்கைகளை பாதித்து வருகிறது. இந்தியாவில் நாங்கள் மக்களை மையமாக கொண்ட உத்தியை பின்பற்றினோம். இந்தியா உலகில் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை கொண்டுள்ளது. இந்தியாவில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு துணையாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பாரம்பரிய மருந்துகளை நாங்கள் பரவலாகப் பயன்படுத்துகிறோம். கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மையத்தை இந்தியாவில் அமைத்தோம். உலகளவில் பாரம்பரிய மருத்துவத்தின் அறிவு விரிவடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் நெகிழ்வான சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க உலக சுகாதார அமைப்பு கண்டிப்பாக சீர்திருத்தம் மற்றும் வலுவடையச் செய்ய வேண்டும். இந்த முயற்சியில் முக்கிய பங்காற்ற இந்தியா தயாராக உள்ளது” என்றார்.