புதுடெல்லி: உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் சுமார் 25 சதவிகித அளவிலான குழந்தைகளே அன்றாடம் வருகை தருகின்றனர். இதற்கு அதன் ஆசிரியர்கள், அடிப்படை வசதி, கரோனா பரவல் உள்ளிட்டப் பலவும் காரணமாயின. இதை உணர்ந்த பாஜக ஆளும் ஆட்சியின் முதல்வர் யோகி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்தார். ‘ஸ்கூல் சலோ அபியான்’ எனும் பெயரிலான இத்திட்டம், சுமார் 5 வயதுள்ள குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்ப்பதாகும். இது, கடந்த ஏப்ரல் 4 முதல் மே 4 வரை என ஒரு மாதத்திற்கு அமல்படுத்தப்பட்டது.
இதில், உ.பி.யின் 75 மாவட்டங்களை விட அதிக எண்ணிக்கையில் சுமார் 80 சதவிகித குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி ஆக்ரா சாதித்துள்ளது. இதன் பின்னணியில் அம்மாவட்டத்தின் துணை ஆட்சியரான தமிழர் எம்.மணிகண்டன் ஐஏஎஸ் இருந்துள்ளார். இதற்காக அவர், கூகுள் அட்டெண்டென்ஸ், வீடுகளுக்கு நேரடியாக ஆசிரியர்களை அனுப்புதல், பஞ்சாயத்து தலைவர்கள் உதவி, அன்றாடம் இணையதளக் கூட்டங்கள் எனப் பல உத்திகளை பயன்படுத்தி உள்ளார்.
ஆக்ராவின் 2490 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 வரையிலான வகுப்பில், சுமார் இரண்டரை லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். இவர்களில் சுமார் ஐம்பதாயிரம் பேர் மட்டுமே அன்றாட வருகையில் உள்ளனர். இதற்கு உருளைக்கிழங்கு அறுவடைக் காலப் பணி, குழந்தைகள் மற்றும் வீடுகளில் பராமரிக்கத் தங்குவது உள்ளிட்டவை காரணம். பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை தருவதும் குறைந்துவிட்டது. இவர்கள் தங்களுக்குள் ஒன்றுகூடி, முதல்வர் யோகி அமலாக்கிய கைப்பேசியின் செல்பி பதிவேடு முறையிலும் தப்பி விடுகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள துணை ஆட்சியரான மணிகண்டன் பல புதிய உத்திகளை பயன்படுத்தி உள்ளார்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் நெய்வேலி தமிழரான மணிகண்டன் கூறும்போது, “ஆசிரியர்கள் வருகையை உறுதிப்படுத்த, பள்ளியின் அருகிலுள்ள அரசு அலுவலகங்களின் அலுவலர்களை பயன்படுத்தினோம். இவர்கள், அவ்வப்போது ஆசிரியர் வருகையை சோதித்து காலை 10 மணிக்கு கூகுள் முறை பதிவேட்டை அனுப்புவார்கள். 8 மணிக்கு துவங்கும் பள்ளிக்கு ஒரு மணி நேரம் முன்பாக ஆசிரியர்களை குழந்தைகளின் வீடுகளுக்கு அனுப்பி அவர்களை வரவழைத்தோம். இவற்றையும் உறுதிப்படுத்த அங்குள்ள அரசு அலுவலர்களையும் நேரில் பள்ளிகளுக்கு அனுப்பினோம். கிராமங்களில் மிகவும் மதிக்கப்படும் பஞ்சாயத்து தலைவர்கள் மூலம், பெற்றோர்களிடம் பள்ளியின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தியதற்கும் 80 சதவிகிதம் பலன் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்தநிலை மீண்டும் மாறினால், பள்ளிக்கு அனுப்பாதவர்கள் குடும்பங்களுக்கு ரேஷன் தடை மிரட்டலும் திட்டமிடப்படுகிறது. இதேபோல், அரசுப் பள்ளிகளுக்கு ஆண், பெண் தனிக்கழிவறை, குடிநீர் உள்ளிட்ட 14 வகை அடிப்படை வசதிகளுக்காக, உ.பி.யில் ‘காயகல்பம்’ எனும் திட்டம் அமலானது. இதையும் மிகக்குறைவான காலகட்டமாக 4 மாதங்களில் அமல்படுத்தியும் ஆக்ராவில் சாதனை படைத்துள்ளது. இதன்பின்னணியிலும் உள்ள உதவி ஆட்சியர் மணிகண்டன் உழைப்பு பாரட்டப்படுகிறது. இவர், 2017-ம் ஆண்டு ஐஏஎஸ் பெற்ற முதல் மருந்தியல் பட்டதாரி.