`எங்கள் எல்லோருக்கும் முதல்வர் ஸ்டாலின்தான் தலைமை ஆசிரியர்’- அமைச்சர் அன்பில் மகேஷ்

“எங்கள் எல்லோருக்கும் முதல்வர் ஸ்டாலின்தான் தலைமை ஆசிரியர். அவர் வகுக்கும் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் சாதாரண தபால்காரர் போலவே சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் உள்ளோம்” என அம்பத்தூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளார்.
சென்னையை அடுத்த பாடியில் திமுக சார்பில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக பொருளாளர் டி ஆர் பாலு சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். நிகழ்வில் திமுக அரசு ஓராண்டில் நிறைவேற்றியுள்ளவை குறித்தும், மக்கள் நல திட்டங்களை குறித்தும் பொதுமக்களுக்கு உரையாற்றிய அமைச்சர் அன்பிலமகேஷ் பொயாமொழி, பின்னர் பேசுகையில், “திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்படவில்லை. 5 லட்சம் கோடி கடன் இருந்தது. அப்பொழுது வருவாய் பற்றாக்குறை 4.6% என இருந்தது. தற்போது முதல்வர் அதை 3.8% அளவிற்கு குறைத்துள்ளார்.
image
கடந்த 10 வருடம் பேரவையில் என்ன நடந்தது என்பது வெளியில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தற்பொழுது பேரவையில் அந்த நிலை இருக்கக்கூடாது என்பதற்காகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேரவையில் என்ன என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் சட்டப்பேரவை நிகழ்வு நேரலையாக கொடுக்கப்படுகிறது. சட்டப்பேரவேயில் நாங்கள் செய்த தவறினை சுட்டி காட்டி கேள்வி கேட்க எப்போதும் எதிர்க்கட்சிகள் என சிலர் இருக்க வேண்டும். ஆனால் இப்போதைய எதிர்க்கட்சிகளால் எங்களை குறை கூற முடியவில்லை. எங்களைவிட அவர்கள்தான் முதல்வர் பேச்சுக்கு மேஜை தட்டுகிறார்கள். அப்படியான ஆட்சியாக இது உள்ளது.
அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் என யார் தவறு செய்தாலும் நேரடியாக முதல்வரிடம் தெரிவிக்கும் வகையில் `முதல்வரின் முகவரி’ எனும் திட்டத்தை அறிவித்துள்ளார் முதல்வர். அதில் இதுவரை 10,01,883 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எங்கள் மீது மக்களாகிய நீங்கள் அனைவரும் வைத்த நம்பிக்கையை காப்பதற்கு திமுகவினர் அனைவருமே செயல்பட்டு வருகின்றோம். எங்கள் எல்லோருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் தலைமை ஆசிரியர். அவர் வகுக்கும் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் சாதாரண தபால்காரர்கள் போலத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இருக்கிறோம்.
image
கொரோனா காலகட்டத்தில் கடந்த இரண்டு வருடம் பள்ளி இல்லாத சூழலால் மாணவர்கள் எப்படி எழுத வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் மறந்துவிட்டனர். இதனை மீளுருவாக்கம் செய்ய முதல்வருக்கு தோன்றிய திட்டம்தான் `இல்லம் தேடி கல்வி திட்டம்’ என எடுத்துரைத்தார். படிப்பை பொறுத்தவரை, பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். உங்கள் குழந்தைகளை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிடாதீர்கள்.
இதையும் படிங்க… ‘பிளே ஆஃப் வாயப்பு இன்னும் இருக்கு’ வெற்றி முனைப்பில் சிஎஸ்கே – ‘ரிவென்ஜ் மோடில்’ மும்பை
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமை உண்டு. ஆகவே உங்கள் குழந்தைக்கு என்ன திறமை என்பதை அவர்களிடம் கேளுங்கள். பிள்ளைகளை மகிழ்ச்சியாக படிக்க விடுங்கள். இக்கருத்து என்னுடையது மட்டுமல்ல. முதல்வரும் இதையே கேட்டுக்கொண்டுள்ளார்” என்றார். இந்த பொதுகூடத்திற்கு அப்பகுதி மக்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.