கோவையில் கங்கா மருத்துவமனையின் ஆடிட்டர், என்.ஜி.ஓ. உரிமம் புதுப்பித்தலுக்கு உள் துறை அமைச்சக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் சிபிஐ கைது செய்த நிலையில், மருத்துவமனையின் உரிமையாளர் ராஜசேகரன் மீதும், மற்றொரு ஆடிட்டர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லஞ்சம் கொடுத்து மோசடி நடைபெறுவதாக கிடைத்த புகாரின் பேரில், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 40 இடங்களில் சிபிஐ நடத்திய அதிரடி சோதனையில், டாக்டர் ராஜசேகரன், எஃப்சிஆர்ஏ பிரிவில் முன்பு பணியாற்றிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் சில ஊழியர்கள் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டாக்டர் ராஜசேகரன் 8 ஆவது குற்றவாளியாகவும், ஆடிட்டர் வாகீஷ் (31) 9 ஆவது குற்றவாளியாகவும், ஆடிட்டர் சுகுணா ரவிச்சந்திரன் 10 ஆவது குற்றவாளியாகவும் பெயரிட்டுள்ளனர்.
வழக்குப்பதிவின் படி, கங்கா எலும்பியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை (GOREF) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தும் மருத்துவமனை நிர்வாகம், தனது என்.ஜி.ஓ. உரிமத்தை புதுப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய பர்மோத் குமார் பாசினுக்கு 2 லட்சம் லஞ்சம் கொடுக்குமாறு வாகீஷுக்கு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 4 ஆம் தேதி, வழக்கின் முதல் குற்றவாளியான பர்மோத் குமார், உரிமத்தை புதுப்பித்துத் தருவதாகக் கூறி டாக்டர் ராஜசேகரனிடம், ரூ2 லட்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து வாகீஷை தொடர்பு கொள்ளுமாறு ராஜசேகரன் அறிவுறுத்தியதாக தெரிகிறது. மற்றொரு ஆடிட்டர் சுகுணா ரவிச்சந்திரனுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஏப்ரல் 7ஆம் தேதி ஹவாலா நெட்வொர்க் மூலம் அவருக்கு ரூ.1.5 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள 50,000 ரூபாயை உரிமம் புதுப்பித்த பிறகு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்தையடுத்து, சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உரிமம் புதுப்பிப்பதற்காக லஞ்சம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை, நாடு முழுவதும் 37 பேர் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட வாகீஷ், டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.