நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் நடு சாலையில் பழுதாகி நின்று போன அரசு பேருந்து ஒன்றை, பயணிகள் ஒன்று சேர்ந்து அரைமணி நேரமாக தள்ளிப்பார்த்தும் பேருந்து ஸ்டார்ட் ஆகாததால் நொந்து போன சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து ராசிபுரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்து நாமகிரிபேட்டை சாலையில் வந்த போது நடுசாலையில் பேருந்து பழுதாகி நின்றது.
செய்வதறியாது திகைத்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர், பேருந்தை லைட்டா தள்ளினா இயங்க ஆரம்பித்து விடும் என்று சொல்ல, அதனை நம்பி வேகாத வெயிலில் சாலையில் இறங்கிய பயணிகள் பேருந்தை தள்ள தொடங்கினர்.
பேருந்து ஸ்டார்ட் ஆக ஆரம்பித்ததும் தள்ளுவதை நிறுத்தினர், பயணிகள் தள்ளுவதை நிறுத்தியதும் பேருந்தும் அங்கேயே நின்று விட்டது. இதனால் மீண்டும் தள்ளு படலம் ஆரம்பித்தது.
பேருந்துக்கு பின்னால் நின்று இளைஞர் சிலர் உயிரை கொடுத்து தள்ளிக்கொண்டிருக்க , சில கவுரவ பயணிகள் பெயருக்கு பேருந்தின் பக்கவாட்டில் நின்று கொண்டு தங்கள் கையை பேருந்தில் பட்டும் படாமலும் வைத்து தள்ளுவது போல பாவனை செய்தனர். தள்ளியும் பேருந்து ஸ்டார் ஆகாததால் விரக்தியுடன் பேருந்தை பார்த்தனர்.
ஒரு கட்டத்தில் தள்ளுரோமா இல்லையோ கூட்டத்தோடு சேர்ந்து நடந்தாவது போவோம் என்பது போல சில பயணிகள் பேருந்துடன் நடக்க ஆரம்பித்தனர். இன்னும் சிலர் இது வேலைக்காது என்று முடிவு செய்து அந்த பேருந்தை தள்ளி சாலையோரமாக கொண்டு நிறுத்தி விட்டு நடந்தே செல்ல ஆரம்பித்தனர்.
அரைமணி நேரமாக நடந்த இந்த தள்ளு வண்டி விளையாட்டை வேடிக்கைப் பார்த்த பலரும் சுற்றிவளைத்து வீடியோ எடுத்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பின்னர் அந்த பேருந்து பழுது நீக்கி பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.