ஒத்தி வைக்கப்பட்ட ஆம்பூர் பிரியாணி திருவிழா – மாட்டிறைச்சி புறக்கணிப்பால் கிளம்பிய எதிர்ப்பு காரணமா?

ஆம்பூர் பிரியாணி, ஆளைத்தூக்கும் அளவுக்கு கமகமக்கும். ஸ்பெயின் நாட்டில் நடக்கும் தக்காளி திருவிழாவின் மாடலில், ஆம்பூர் பகுதியிலிருக்கும் அனைத்து வகை பிரியாணிக் கடைகளையும் ஒன்றுசேர்த்து, பிரியாணி திருவிழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்தது திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம். ஆம்பூர் வர்த்தக மையத்தில், நாளை வெள்ளிக்கிழமை, அடுத்த நாள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாள்களிலும் பிரியாணி திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக செய்யப்பட்டுவந்தன. 30-க்கும் மேற்பட்ட அரங்குகள், 20-க்கும் அதிகமான பிரியாணி வகைகள் என பிரியாணி திருவிழா களைகட்டவிருந்தது. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். நுழைவுக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் எனவும் அழைப்பு விடுத்திருந்தார் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா.

பிரியாணி

அதே நேரத்தில், இந்த திருவிழாவில், மாட்டிறைச்சி பிரியாணி இடம் பெறுகிறதா… இல்லையா? என்ற அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வாய்மொழியாகவோ, அதிகாரப் பூர்வமாகவோ வெளியிடாமல் இருந்தது. ஆனாலும், பிரியாணி திருவிழா தொடர்பாக மே 6-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, ‘‘சிக்கன், மட்டன் பிரியாணி மட்டுமே இடம் பெறும். மாட்டிறைச்சி பிரியாணி இடம் பெறாது’’ என்ற தகவல் பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘‘இந்த திருவிழாவை நடத்தி, அதனை ஆவணம் செய்து அரசிடம் சமர்பித்தால், ஆம்பூர் பிரியாணிக்கு ‘புவிசார்’ குறியீடு பெற முடியும்’’ என்ற கருத்தை மட்டும் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, அந்தக் கூட்டத்தில் பகிர்ந்திருந்தார்.

அன்றைய தினத்திலிருந்தே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ‘பீஃப் பிரியாணியையும் வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கிவிட்டனர். நாளை பிரியாணி திருவிழா தொடங்கவிருந்த நிலையில், இன்று மாலை 4 மணி வரையிலும் மாட்டிறைச்சி பிரியாணி தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு கருத்தினையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பிரியாணி திருவிழா நடக்கவிருக்கும் ஆம்பூர் வர்த்தக மையத்தை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, எஸ்.பி பாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர். மாவட்ட ஆட்சியரின் மௌனம், ‘மாட்டிறைச்சி பிரியாணி அனுமதிக்கப்படாது’ என்பதை எடுத்துரைக்கும் விதமாகவே இருந்தது.

பிரியாணி திருவிழா நடக்கவிருந்த இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

இதனால், ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ‘பீஃப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், பிரியாணி திருவிழா நடைபெறும் வளாகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்’ என்று அறிவித்தனர். இது, பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இது தொடர்பாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டிருந்த பதிவில், ‘‘ஆம்பூரில் அன்றாடம் பத்தாயிரம் கிலோ அளவுக்கு மாட்டிறைச்சி விற்பனையாகிறது.

பெரும்பான்மையானவர்களால் மாட்டுக்கறி விரும்பி உண்ணப்படுகிறது. ஆனாலும், பொது நிகழ்வில் அரசே ஒதுக்கி வைப்பதை ஏற்க முடியாது. ‘சிலர் பன்றிக்கறி பிரியாணியும் இடம் பெற வேண்டும்’ என்று வற்புறுத்துவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். உலகத்தில் எங்குமே பன்றிக்கறி பிரியாணி என்ற வகையே இல்லாதபோது, மதக்கண்ணோட்டத்தில் பிரச்னையைக் கிளப்பி விடக்கூடாது’’ என்று கூறியிருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரோ, ‘‘திருவிழா நடத்தப்படும் வளாகம் முன்பு இலவசமாக மாட்டிறைச்சி பிரியாணியை வழங்குவோம்’’ என்று அறிவித்திருந்தனர்.

ஆதவன் தீட்சண்யா

‘மாட்டிறைச்சி பிரியாணி வழங்கக்கூடாது. அதுமட்டுமின்றி, பிரியாணி திருவிழாவையே நடத்தக்கூடாது’ என்று மற்றொரு பக்கம் இந்து அமைப்புகளும் போராட்டத்தை கையிலெடுத்தன.

இது தொடர்பாக பேசியிருந்த இந்து முன்னணியின் வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ், ‘‘மக்கள் பிரச்னைகளை தீர்க்க நேரமில்லாத அதிகாரிகள், பிரியாணி திருவிழா நடத்துவது ஏற்புடையதல்ல. இதை அரசாங்கமே செய்யக்கூடாது. பிரியாணி என்பது ஒருசாராரின் உணவு. அவர்களை ஊக்கப்படுத்துவது போன்ற செயல்களில், மாவட்ட ஆட்சியர் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. திருப்பதூர் மாவட்ட மக்கள் பிரியாணி திருவிழாவைப் புறக்கணிக்க வேண்டும். இந்த திருவிழாவை இந்து முன்னணி எதிர்க்கிறது. மாட்டிறைச்சி பிரியாணியை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுக்கக் கூடாது. மீறி வழங்கினால், இந்து முன்னணி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்’’ என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘‘சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எனவே, பிரியாணி திருவிழாவில் பொது மக்கள் கலந்து கொள்ள முடியாமல் போகும். எனவே, ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.