கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
சூம் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக கட்சித் தலைவர்கள் சந்திப்பு ஒன்று நேற்று (11) இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான ரணில் விக்ரமசிங்க, ரவுப் ஹக்கீம், ரஞ்சித் மத்தும பண்டார, எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பலர் இதில் இணைந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் சபை முதல்வரும் ஆளும் கட்சி பிரதம கொறடாவும் பங்கேற்காமை குறித்து சபாநாயகர் அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரதமர் பதவி விலகியதால் ஆளும்கட்சி சார்பில் சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தனவும்; ஆளும் கட்சி கொறடாவான பிரசன்ன ரணதுங்கவும் இதில் பங்கேற்பதில்லை என சபாநாயகருக்கு அறிவித்திருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் பாதுகாப்பை வழங்குமாறும் சபாநாயகரிடம் கேட்கப்பட்டுள்ளது.
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பொலிஸ் மா அதிபரை கேட்டுள்ளார்.
தனது கணனியும் மடிக்கணனியும் தீக்கிரையாகி இருப்பதால் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் நிறைவேற்று குழுக்கூட்டத்தில் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக பங்கேற்க முடியாமல் போனதாக பல கட்சித் தலைவர்கள் சபாநாயகருக்கு அறிவித்திருந்தனர்.
கட்சித் தலைவர்களுக்கு பாராளுமன்றத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த சந்திப்பு நேற்று (11 ஒழுங்கு செய்யப்பட்டடமை குறிப்பிடத்தக்கது..