பெங்களூரு: கர்நாடகாவில் மதமாற்றத்துக்கு எதிரான மசோதாவை அவசரச் சட்டம் மூலம் அம்மாநில அரசு அமல்படுத்தியது. கர்நாடக மாநில அரசு கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கர்நாடகா சட்டசபையில் நிறைவேற்றியது. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் எந்த ஒரு மதத்தையோ அல்லது சிறுபான்மை இனத்தையோ மனதில் வைத்து கொண்டு வரப்படுவதில்லை என கூறியிருந்தது. மதமாற்றம் செய்து கொண்டவர் எந்த ஒரு வற்புறுத்தலும், சட்டவிரோதமும் இல்லாமல் மதமாற்றம் செய்து கொண்டதை நிரூபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வற்புறுத்தியும், ஆசை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் செய்ய முயற்சிப்பவர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தது. மதம் மாற விரும்புபவர்கள் 2 மாதங்களுக்கு முன்பே அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மதம் மாறினால், அவர்களின் அடிப்படை சாதியின் மூலம் கிடைக்கும் இட ஒதுக்கீட்டின் பலன்கள் உள்பட அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் சேரும் மதத்தில் கிடைக்கும் சலுகைகளை பெற முடியும். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். சிறுவர்கள், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை மதம் மாற்ற முயற்சி செய்தால் அத்தகையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே போல் கூட்டு மதமாற்றம் செய்தாலும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என கர்நாடக அரசு ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.