பெங்களூரு: கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் சிறப்பாணை பிறப்பிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு விதான சவுதாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் மதமாற்ற தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் நிலையில் சிறப்பாணை பிறப்பிப்பது தொடர்பாக விவாதித்து அதற்கு அனுமதி பெறப்பட்டதாக அமைச்சர் ஜேசி மாதுசாமி தெரிவித்தார்.இது தொடர்பாக நிருபர்களிடம் அமைச்சர் ஜேசி மாதுசாமி கூறியதாவது: ‘ மாநிலத்தில் மதமாற்ற சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. எனவே மாநிலத்தில் பலவந்தமாகவோ? இலவச கல்வி, வேலைவாய்ப்பு திருமணம் உள்ளிட்டவை வழங்கப்படும் என ஆசை காண்பிக்கப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 3 வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அப்பாவி பெண்கள் , எஸ்சி.,எஸ்டி மக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்தால் மூன்று முதல் 10 வருடம் சிறைத்தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை சிறைத்தண்டனையும் கிடைக்கும். கூட்டாக மத மாற்றம் செய்யப்பட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதமும் 10 வருடம் சிறைத்தண்டனையும் கிடைக்கும். இந்த சட்டத்தின் காரணமாக கட்டாய மதமாற்றம் செய்யும் நபர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்’ என்றார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.