பெங்களூரு: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் ஈடுபடுவதற்கு முன், கர்நாடகாவில் பிரபல ஐபிஎஸ் அதிகாரியாக திகழ்ந்தவர். தனது அதிரடி நடவடிக்கைகளால் கன்னட மக்களால் ‘சிங்கம்’ என அழைக்கப்பட்டவர். தமிழக அரசியலில் அவர் கடுமையாக விமர்சிக்கப்படுவதை அறிந்த அவரது நலம்விரும்பிகள் பலர், ‘அண்ணாமலை கர்நாடக அரசியலுக்கு வர வேண்டும்’ என சமூக வலைதளங்களில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அண்ணாமலை வாயிலாக கர்நாடக தமிழர்களின் வாக்குகளை கவர பாஜக மேலிடம் முடிவெடுத்துள்ளது.
இதற்காக அவரை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தவும் பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாகவே அண்ணாமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலார் தங்கவயலில் களமிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கோலார் தங்கவயல் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2008 மற்றும் 2013 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. கடந்த 2018 தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த நிலையில், 50 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு காங்கிரஸ் மீண்டும் வென்றது. இழந்த இத்தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என கோலார் பாஜக எம்.பி. முனுசாமி திட்டமிட்டுள்ளார்.
அங்கு பெரும்பான்மை வாக்காளர்களாக உள்ள தமிழர்களை கவருவதற்காக அண்ணாமலை வரவழைக்கப்பட்டார். தனித்தொகுதியான கோலார் தங்கவயல் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அண்ணாமலை ஊரில் கால் வைத்ததும் நேராக பாபாசாகேப் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோயில் கும்பாபிஷேகம், பொதுக்கூட்டம், மோட்டார் சைக்கிள் பேரணி ஆகியவற்றில் உற்சாகமாகப் பங்கேற்றார்.
தங்கவயல் தமிழர்களுடன் மிகுந்த நெருக்கம் காட்டிய அண்ணாமலை தமிழிலும் கன்னடத்திலும் சிறப்புறை ஆற்றினார். அந்த மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட அண்ணாமலை, “மூடப்பட்ட தங்கச் சுரங்கத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுரங்கம் மூடப்பட்டதால் நலிவடைந்திருக்கும் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். தங்கவயலில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்” என அழுத்தமாக குறிப்பிட்டார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு கோலார் தங்கவயல் தமிழர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் பாஜக மேலிடம் உற்சாகம் அடைந்துள்ளது. அடுத்ததாக அவரை தமிழர்கள் கணிசமாக வசிக்கும் பெங்களூரு, ஷிமோகா, பத்ராவதி உள்ளிட்ட இடங்களிலும் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.