கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து நெருக்கடி: 4-வது முறை ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா

பெங்களூரு: ஆந்திராவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரநாத். கடந்த 1989-ம் ஆண்டு முதல் கர்நாடக காவல் துறையில் பணியாற்றி வருகிறார். தலித் வகுப்பை சேர்ந்த இவர் கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய நிர்வாக பிரிவு டிஜிபியாக இருந்த உமாபதி, தன்னை மரியாதை குறைவாக நடத்திய‌தாக கூறி ராஜினாமா செய்து இருந்தார். ராஜினாமாவை ஏற்காததால் மீண்டும் பணிக்கு திரும்பினார்.

2014-ம் ஆண்டு பெங்களூருவில் உணவகத்தில் பெண் ஒருவரை செல்போனில் புகைப்படம் எடுத்ததாக இவர் மீது புகார் எழுந்தது. அதற்கு ரவீந்திரநாத் அப்போதைய‌ பெங்களூரு நகர காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் தனது பதவி உயர்வை தடுக்க இந்த சதி வேலையில் ஈடுபட்டதாகக்கூறி ராஜினாமா செய்து இருந்தார். அப்போது ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக போலீஸார் போராட்டம் நடத்தியதால் ராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை.

ஜூனியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதாக கூறி ரவீந்திரநாத் கடந்த 2020-ம் ஆண்டும் ராஜினாமா செய்தார். அப்போது முதல்வர் எடியூரப்பா தலையிட்டதால் தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றார்.

இந்நிலையில் கர்நாடக சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குன‌ரக டிஜிபியாக பணியாற்றி வந்த ரவீந்திரநாத் அண்மையில் போலீஸ் பயிற்சி பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ரவீந்திரநாத் தனது பதவியை 4வது முறையாக ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை தலைமை செயலர் ரவிகுமாரிடம் நேற்று முன்தினம் வழங்கினார்.

ரவீந்திரநாத் தனது ராஜினாமா கடிதத்தில், “கர்நாடகாவில் சில அரசு அதிகாரிகள் போலியாக‌ எஸ்.சி. எஸ்.டி. சாதி சான்றிதழ் பெற்று பெரிய பதவிகளை வகித்து வருகின்றனர். தற்போது எம்எல்சி பதவி வகித்து வரும் ஒருவரும் போலி சான்றிதழ் பயன்படுத்தியாக புகார் எழுந்தது. மேலும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் அரசியல் ஆலோசகர் ரேணுகாச்சார்யாவின் மகள் போலி சான்றிதழ் மூலம் பதவி பெற்றது குறித்து நான் விசாரணை நடத்திவந்த நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.