உதய்ப்பூர்: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் 3 நாள் ‘சிந்தனை அமர்வு’ (சிந்தன் ஷிவிர்) மாநாடு உதயப்பூரில் நாளை தொடங்குகிறது. முதல்நாள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தொடக்க உரை ஆற்றுகிறார். மாநாட்டின் கடைசி நாளான 15-ந் தேதி ராகுல்காந்தி நிறைவுரை ஆற்றுகிறார்.
100ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடந்த 10ஆண்டுகளாக வரலாறு காணாத தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால், கட்சிக்குள்ளே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சியின் கட்டமைப்பை சீர்படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைளை அகில இந்திய காங்கிரஸ் தலைமை முன்னெடுத்து வருகிறது. அதன் அடுத்த நகர்வாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் 3 நாள் மாநாடு அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டுக்கு சிந்தன் ஷிவிர் (‘சிந்தனை அமர்வு’) என பெயரிடப்பட்டு உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் சிந்தனை ஷிவிர் மாநாடு நாளை தொடங்குகிறது. ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, இதுபோல ‘சிந்தனை அமர்வு’ மாநாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 9 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது மீண்டும் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. மாநாட்டில் கலந்துகொள்ள ராகுல்காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் இன்று மாலை டெல்லியில் இருந்து ரயில் மூலம் உதய்பூருக்கு புறப்படுகிறார்கள். மேலும், நாடு முழுவதும் இருந்து 430 நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கும் வகையில் பல குழுக்களை ஏற்கனவே சோனியா காந்தி அறிவித்திருந்தார். அவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
இந்த மாநாட்டை நாளை (மே 13ந்தேதி) அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மாநாட்டின் இறுதி நாளான 15ம் தேதி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நிறைவுரை ஆற்றுகிறார்.
3நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, கட்சியை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் வியூகம் வகுக்கப்படுகிறது. முக்கியமாக, ‘ஒரே குடும்பம், ஒரே டிக்கெட்’ என்ற வகையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தல் சீட் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்ட உள்ளது.
இதுமட்டுமின்றி, கட்சியின் அனைத்து மக்களுக்கும் வாய்ப்புகள் வழங்கும் வகையில், கட்சியில் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு 50 சதவீத சீட் வழங்குவது, இளைய தலைமுறையினரை ஊக்குவிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், நாட்டின் பொருளாதார நிலவரம், கொரோனா, வேளாண் பிரச்னைகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொதுத்துறை பங்குகள் விற்பனை, காஷ்மீர் தொகுதி மறுவரையறை, மத்திய-மாநில உறவுகள், மத அடிப்படையில் வாக்காளர்கள் ஒன்று சேர்வது ஆகிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது, பிரசாந்த் கிஷோரின் அறிக்கை உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த மாநாடு காங்கிரசாரிடையே எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.