கடந்த சில நாள்களாக மின்வெட்டு பிரச்னைதான் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கொளுத்தும் வெயிலில் பலமணி நேர மின்வெட்டை சகித்துக்கொள்ள முடியாமல் பலரும் தவிக்கும் நிலையில், பிகாரிலும் ஒரு கிராமத்தில் மின்வெட்டு பிரச்னை மக்களைப் பாடாய் படுத்தியிருக்கிறது. ஆனால் அந்த மின்வெட்டின் காரணமே வேறு.
கிழக்கு பிகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள கணேஷ்பூர் கிராமத்தில், கடந்த சிலமாதங்களாக தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சுமார் 2 லிருந்து 3 மணி நேரம் வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது சாதாரண மின்வெட்டு என மக்கள் நினைத்திருக்கின்றனர். இது பல மாதங்களாக தொடர்ந்த நிலையில், இது குறித்து அந்த கிராம மக்கள் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். அப்போது பக்கத்து கிராமத்தில் மின்வெட்டு இல்லாதது தெரிய வந்திருக்கிறது.
அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இதன் பின்னணியைத் தேடியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில், அந்தப் பகுதியில் உள்ள எலெக்ட்ரீஷியன் ஒருவர் தன் காதலியை இருட்டில் சந்திக்கப்பதற்காகச் கிராமம் முழுக்க கரன்ட் கட் செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அந்த எலெக்ட்ரீஷியனையும் அவரது காதலியையும் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
பிடிபட்ட எலெக்ட்ரீஷியனுக்கு கிராமத்து மக்கள் சரமாரியாக அடி கொடுத்து, மொட்டையடித்து, தெருக்களில் நடக்கவிட்டுள்ளனர். இறுதியில் அவர்கள் இருவருக்கும் கிராம மக்கள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.