புதுடெல்லி: உத்தர பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. விஸ்வநாதர் கோயிலை இடித்து இந்த மசூதியை முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டியதாக கூறப்படுகிறது. மசூதி வளாகத்தின் வெளிப்பற சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. அம்மனை தினமும் தரிசிக்க அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பரபரப்பாகி உள்ள நிலையில், இதுகுறித்து விஸ்வ இந்து பரிஷத்தின் செயல் தலைவர் அலோக் குமார் டெல்லியில் கூறியதாவது:
ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி வழக்கில் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தது உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு இப்போது, அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் கட்டி முடிக்கப்படும் வரை கியான்வாபி மசூதி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். மசூதியின் வெளிப்புற சுவற்றில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் தரிசிக்க அனுமதி வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர். மசூதிக்குள் உள்ளே செல்ல பெண்கள் கோரிக்கை விடுக்கவில்லை. வெளிப்புற சுவற்றில் உள்ள அம்மனை தரிசிக்கவே விரும்புகின்றனர்.
இவ்வாறு அலோக் குமார் கூறினார். இதனிடையே, ஜூன் மாதம் ஹரித்வாரில் நடக் கும் விஸ்வ இந்து பரிஷத் உயர் நிலைக் குழு கூட்டத்தில் இது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று பரிஷத் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.