குடிபோதையில் ரகளை: நள்ளிரவில் போலீசை வரவழைத்து அவசரமாக 'சில் பீர்' கேட்ட தெலுங்கானா வாலிபர்

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் கடந்த திங்கட்கிழமை அன்று நள்ளிரவு 2.30 மணியளவில் 100-க்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார்.

போனை எடுத்த போலீஸ் ஆபரேட்டர்களில் ஒருவர் வாலிபரிடம் போன் செய்ததற்கான காரணம் குறித்து கேட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபர் மிகவும் அவசர நிலை என்றும் இதை போனில் சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார். இதனால், இரண்டு கான்ஸ்டபிள்கள் வாலிபரின் வீட்டிற்கு அவசரமாக சென்று கதவைத் தட்டியுள்ளனர்.

வெளியே வந்த வாலிபர் ஏற்கனவே குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. போலீசாரைக் கண்டதும் இந்நேரத்தில் இந்த பகுதியில் மதுபானக் கடைகள் மூடியுள்ளது என்றும் அதனால் உடனே இரண்டு குளிரூட்டப்பட்ட பீர் வாங்கி வரும்படியும் அந்த வாலிபர் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த போலீசார் வாலிபரை  சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் வாலிபரை மறுநாள் காவல் நிலையத்திற்கு வரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி தனது தந்தையுடன் காவல் நிலையத்திற்கு சென்ற வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆலோசனை வழங்கினர்.

சமீப காலமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சில விசித்திரமான விஷயங்களும் புகார்களாக வருவது வழக்கமாகியுள்ளன. தெலுங்கானாவைச் சேர்ந்த மற்றொரு நபர் தனது மனைவி மட்டன் கறி சமைக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். ஒருவர் 100 எண்ணுக்கு 6 முறை டயல் செய்ததால் கைது செய்யப்பட்டார்.

இதுபோல் கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் பெண் ஒருவர் தனது காதலன் தன்னிடம் பேச மறுக்கிறார் என்று புகார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்..
மே 14ந்தேதி அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை- உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.